டெல்லி: ரயிலில் செல்லும்போது, பெற்றோர் முதலில் பிள்ளைகளுக்குச் சொல்லும் அறிவுரை ஜன்னல், ஜன்னல் கம்பிகளைத் தொடாதீங்க என்பதாகவே இருக்கும். ஏனென்றால், இந்தியாவில் உள்ள ரயில்களில் நீக்கமற நிறைந்திருப்பது பான் பராக் கறைகளும், எச்சில் கறைகளும்தாம்.
ரயில்களில் உள்ள பான் பராக் கறைகள், எச்சில் கறைகள் போன்றவற்றைச் சுத்தம் செய்வதற்கு அதிகமான நீர் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், கறைகளை நீக்க 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுவதாக ரயில்வே தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
உமிழ்வதற்கும் தொழில்நுட்பம்
இந்நிலையில், நீர் வீணாக்கப்படுவதைத் தடுக்கவும், பணம் அதிகமாகச் செலவிடுவதைத் தவிர்க்கவும் ஒன்றிய அரசு புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்த உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, நாக்பூரைச் சேர்ந்த ஈசி-ஸ்பிட் (Ezyspit) என்னும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தினுடன் கைக்கோத்துக்கொண்டு எச்சில் உமிழ்வதற்கு என தனித்துவமான பைகள், தொட்டிகள், கூடைகள் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ஐந்து ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை விலை கொண்ட இந்தப் பையில் 15-20 முறை எச்சில் உமிழ்ந்துகொள்ளலாம். இந்தப் பையில், மேக்ரோமாலிக்யூல்கள் பல்ப் டெக்னாலஜி என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், எச்சிலில் உள்ள நுண்கிருமிகள் வெளியே வராமல் இருக்க உதவும் என அதன் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது
இதன் முக்கிய அம்சமாக, இந்தப் பைக்குள் விதைகள் இடம்பெற்றிருக்கும். மேலும், எச்சிலை திடப்பொருளாக மாற்றும் பொருள்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், இந்தப் பையை மண்ணில் தூக்கி எறிந்த பின்னர் உள்ளிருக்கும் விதைகள் முளைக்கத் தொடங்கும். இப்பைகளை சட்டைப் பைகளில் வைத்துக்கொண்டு பயணிக்கலாம்.
முதற்கட்டமாக, 42 ரயில் நிலையங்களில் இந்தப் பைகளை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. அதாவது, வடக்கு, மேற்கு, மத்திய ஆகிய ரயில்வே மண்டலங்கள் Ezyspit ஸ்டார்ட்-அப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எச்சில் உமிழ்வதை மரம் வளர்க்கப் பயன்படுத்தும் நோக்கில் இத்திட்டம் தீட்டப்பட்டதாக அந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: செடிகள் வளர்க்கும் தொட்டியை தேர்வு செய்வது எப்படி?