மும்பை (மகாராஷ்டிரா): இந்திய கடற்படையில் பயன்படுத்தப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்று கிலோ ரக நீர்மூழ்கிக் கப்பல் (Kilo-class submarine).
ரஷ்யா நாட்டின் தயாரிப்பான கிலோ ரக நீர்மூழ்கிக் கப்பல்களை நவீனப்படுத்துவது தொடர்பான உளவுத்துறை தகவல்கள் வெளியில் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
19 இடங்களில் ரெய்டு
இந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வு பிரிவினர் (சிபிஐ) விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, டெல்லி, நொய்டா, மும்பை, ஹைதராபாத் ஆகிய மாநிலங்களின் 19 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியதில், பல எலெக்ட்ரானிக் உபகரணங்கள், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது.
சோதனையில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்திய கடற்படை கமெண்டர் ஒருவர், இரண்டு ஓய்வு பெற்ற கடற்படை அலுவலர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை சிபிஐ அலுவலர்கள் நேற்று (அக். 26) கைது செய்தனர். இவர்களை தொடர்ந்து பலரும் கைதுசெய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தொடரும் விசாரணை
கைதானவர்களுடன் தொடர்பிலிருக்கும் கடற்படை அலுவலர்களை சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது. மேலும், சிபிஐ விசாரணைக்கு இந்திய கடற்படை முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், விசாரணைக்கு தேவைப்படும் அலுவலர்களை விசாரிக்க அனுமதி அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சிபிஐ தவிர்த்து இந்திய கடற்படையும் தனிப்பட்ட முறையில் உள்விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அதற்காக, இந்திய கடற்படையை சேர்ந்த வைஸ் அட்மைரல், ரியர் அட்மைரல் அலுவலர்களை விசாரணைக்காக நியமித்துள்ளதாக கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெகாசஸ் விவகாரத்தில் 3 நபர் விசாரணை குழு அமைப்பு!