இமாச்சலப் பிரதேசம்: சுதந்திரப் போராட்ட காலங்களில், பாடல்கள் மூலம் மக்களுக்கு பலர் தேசப்பற்றினை பரப்பினர்.
அந்த வகையில் நாட்டுக்காக ஆயுதம் கொண்டு போராடிய இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ராம் சிங் தாக்கூரி, தனது எழுச்சி மிக்க பாடல்களின் மூலம் தேசபற்றை இந்திய மக்களுக்கு ஊட்டினார்.
பதற்றமான சூழலில் நாட்டு மக்கள் இருந்தபோது, “கடம் கடம் படே ஜா”, “சுப் சுக் செயின்” போன்ற பாடல்களை ராம் சிங் தாக்கூரி இயற்றினார். தேசத்தின் மீதான தீரா பக்தியால், இந்திய ராணுவத்திலும் பணியாற்றினார் அவர்.
ஜப்பானியர்களால் கைது
இசையமைக்கவும் அதேசமயம் ஆயுதங்களை நிர்வகிக்கவும் பலரிடம் திறமை இல்லை. ஆனால் தாக்கூரிக்கு இவை இரண்டிலும் வல்லமை இருந்தது.
இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவைச் சேர்ந்த இவர், 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிறந்தார். அவர் தனது 14 வயதில் கூர்கா படையில் சேர்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது, மலாய் மற்றும் சிங்கப்பூருடன் போர் புரிவதற்காக அனுப்பப்பட்டார். அங்கு அவர் ஜப்பானியர்களால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் 1942ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளிவந்த அவருக்கு, சுபாஷ் சந்திர போஸுடன் நல்ல தொடர்பு ஏற்பட்டது. அப்போது தாக்கூரியின் பாடல் திறமையைப் பாராட்டும் விதமாக, சுபாஷ் சந்திர போஸ், தாக்கூரிக்கு வயலின் ஒன்றை பரிசளித்தார்.
தாக்கூரியின் பாடல் திறமை
தாக்கூரியின் பாடல் அனைவரையும் கவர்வதால், ஆசாத் ஹிந்த் படையின் புகழ்பெற்ற பாடலுக்கும், ஜான்சி ராணியின் படைப்பிரிவு அணிவகுப்பு பாடலான “ஹம் பாரத் கி லட்கி ஹைன்” என்ற பாடலுக்கும் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.
கேட்போரை ஒருங்கிணைப்பதில் தாக்கூரியின் திறனைக் கண்டறிந்த நேதாஜி, “சுக் செயின் பர்கா பார்ஸே” என்ற பாடலுக்கு இசையமைக்க அவரை அனுப்பி வைத்தார். இந்தப் பாடல் முதலில் ரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் “பாரத பாக்கிய விதாதா” என எழுதப்பட்ட பாடலாகும்.
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்று, இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு சத்தியப்பிரமாணம் எடுத்தபோது, கேப்டன் ராம் சிங் தலைமையில் “சுப் சுக் சங்கிலி பர்கா பார்சே பாடல்” அரங்கம் முழுக்க ஒலித்தது.
பன்முகத்தன்மையின் வெளிபாடு
தாக்கூரியை குறித்து இமாச்சல் கூர்கா அசோசியேஷன் தலைவர், ரவிந்தர் சிங் ராணா கூறியதாவது, “ஆசாத் ஹிந்த் படையில் இருந்த எங்கள் கேப்டன் ராம் சிங் தாக்கூரி, எங்கள் கூர்கா சமூகத்தின் மிக முக்கியமான நபராக இருந்தார். அவர் எங்கள் கிராமமான கனியாராவில்தான் பிறந்தார்.
தாக்கூரி முதலில் ராணுவத்தில் இருந்தார். பின்னர் கூர்கா படையில் சேர்ந்தார். இதையடுத்து சுபாஷ் சந்திர போஸின், ஆசாத் ஹிந்த் படையில் சேர்ந்தார். இங்கே அவர் இசை அமைப்பாளராகவும், இசைக்கலைஞராகவும் இருந்தார்” என்றார்.
அவரைத் தொடர்ந்து அவரது மருமகள் ரஞ்சுலா தாக்கூரி, “அவர் சுபாஷ் சந்திர போஸுடன் ஆசாத் ஹிந்த் படையில் சேர்ந்தார். மேலும் அவர் “கதாம் கடம் பதயே ஜா” போன்ற பல மெல்லிசைகளை இயற்றினார்” என்றார்.
தேசத்திற்கான அவரது வீர பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக, உத்தரப் பிரதேச அரசு அவரை ஒரு ஆய்வாளராக நியமித்தது. பின்னர் 2002ஆம் ஆண்டு அவர் தனது மூச்சை நிறுத்திக்கொண்டார்.
இதையும் படிங்க: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் காத்திருக்கிறதா லித்தியம்..!