குஜராத்: இந்திய கடற்பகுதி வழியாக வெளிநாட்டினர் போதைப்பொருள் கடத்துவதாக உளவுத்துறையினர் குஜராத் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில், நேற்றிரவு(மார்ச்.6) குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் இணைந்து குஜராத்தின் அரபிக்கடல் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஓகா துறைமுகத்திலிருந்து சில நூறு மைல்களுக்கு அப்பால், அரபிக்கடல் பகுதியில் ஈரானிய படகு ஒன்று தென்பட்டது. அதை கடலோர காவல் படையினரின் படகு பின்தொடர்ந்தது. இதையடுத்து ஈரானிய படகு தப்பிச்செல்ல முயன்றது. அதனை விரட்டிப்பிடித்த காவல் படையினர், அதில் சோதனை செய்தனர். அதில் ஐந்து ஈரானியர்கள் இருந்தனர்.
குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் இந்திய கடலோர காவல்படையினர், அந்த படகில் சோதனை மேற்கொண்டதில், போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து படகில் இருந்த சுமார் 425 கோடி ரூபாய் மதிப்புள்ள 61 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் ஐந்து ஈரானியர்களையும் கைது செய்தனர், போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்பட்ட படகையும் சிறை பிடித்தனர்.
பிறகு, ஈரானியர்களையும், படகையும் ஓகா துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு போதைப்பொருள் கடத்தலில் இந்தியாவில் உள்ள தொடர்புகள் குறித்தும், சர்வதேச கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், குஜராத் வழியாக பஞ்சாப்புக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 40 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவும் குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் கடலோர காவல் படையினரின் கூட்டு நடவடிக்கை ஆகும். கடந்த ஆண்டில் மட்டும் குஜராத் வழியாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்கள் கடத்தப்பட்டுள்ளன.
கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத் மாநில கடற்பகுதியில், கப்பல் ஒன்றிலிருந்து 1,500 கிலோ ஹெராயினை இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகள் கைப்பற்றினர். வணிக கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த ஹெராயினின் மதிப்பு சுமார் 550 மில்லியன் டாலர் என கடலோரக் காவல்படை தெரிவித்தது. இவ்வளவு போதைப் பொருள்கள் ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என கடற்படை அதிகாரிகள் கூறினர்.
இந்தியாவிற்குள் போதைப்பொருள் ஊடுருவுவதற்கான முக்கிய மையமாக குஜராத் திகழ்வதாக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் குற்றம் சாட்டின. குறிப்பாக குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில்தான் அதிக அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடைபெறுகிறது என்றும், ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரானில் நுழைந்து பிறகு குஜராத் வழியாகத்தான் இந்தியாவுக்குள் போதைப்பொருள்கள் கொண்டுவரப்படுகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தியாவிலேயே குஜராத்தில்தான் அதிகமான போதை பொருட்கள் விற்பனை ஆகிறது என்றும், அங்கிருந்துதான் மற்ற மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது என்றும் தமிழக அரசியல் வாதிகள் குற்றம் சாட்டினர். இதற்கு மத்திய அரசும், குஜராத் அரசும்தான் பொறுப்பு என்றும், இதைக் கட்டுப்படுத்த பாஜக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் தமிழ்நாடு போலீசார் 12 பேர் சிறைபிடிப்பு.. நடந்தது என்ன?