நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட்டால் உதவி செய்வதற்கு தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. அதன்படி, நிவர் புயல் மீட்புப் பணிக்காக தக்சன் பாரத் தலைமையகத்தின் 22 இந்திய ராணுவ குழுக்கள் சென்னை, புதுச்சேரி, திருச்சி வந்துள்ளன. இவர்களுக்கென்று புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணம் வழங்க தயாராக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டன.
தமிழ்நாடு, புதுச்சேரி நிலவரங்கள் குறித்து மாநில மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளில் உள்ள அலுவலர்களிடம் தொடர்புகொண்டு பாதிப்பு குறித்த நிலவரங்களை ராணுவ குழுக்கள் கேட்டறிந்தன. இந்தக் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பலத்த மழை, கடலோரப் பகுதிகளில் துணிச்சலுடன் மக்களுக்கு உதவி செய்தது.
நிவர் புயலின் தாக்கம் எதிர்பார்த்த நிலையில், இன்று அதிகாலை 2.30 மணிக்கு புதுச்சேரியின் வடக்கே முழுமையாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மிக கனமழை பெய்தது. கணிசமான இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி விரைந்த இந்திய ராணுவ மீட்புப் படையினர் புயலால் சரிந்த மரங்களை அகற்றவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், மக்களை மீட்க சிறப்பாக உதவி செய்தனர்.
இதனையடுத்து, நிவர் புயலில் துரிதமாகச் செயல்பட்ட ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பை புதுச்சேரி வருவாய்த் துறை அமைச்சர் முகமது ஷாஜகான் பாராட்டினார்.
இதையும் படிங்க: ஹோஸ்பேட்: தேவதாசி முறை இன்னும் நடைமுறையிலுள்ள கிராமம்