டெல்லி: நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து டெல்லி வந்துகொண்டிருந்த ஐசி-814 என்ற இந்திய விமானத்தை 1999ஆம் ஆண்டு ஐந்து பயங்கரவாதிகள் கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்போது ஏற்படுத்தியிருந்தது.
டிசம்பர் 24, 1999ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், இந்திய வான்வெளி எல்லையில் நுழைந்த சில நொடிகளில் பயங்கரவாதிகள் அந்த விமானத்தைக் கடத்தினர். விமானக் கடத்தலுக்கு அப்போது ஹர்கத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
3 பயங்கரவாதிகள் விடுதலை
இந்திய சிறையில் இருக்கும் முஸ்தக் அகமத் ஸர்கார், அகமத் ஓமர் சயீத் சேக், மசூத் அஸார் ஆகிய மூன்று பயங்கரவாதிகளை விடுதலை செய்யவேண்டி பயங்கரவாதிகள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த மூன்று பயங்கரவாதிகளும் பல்வேறு பயங்கரவாதத்தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அரசு நடத்திய பல கட்டப்பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், ஏழு நாள்கள் பயணிகள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்ட நிலையில், அந்த மூன்று பயங்கரவாதிகளையும் விடுதலை செய்ய கடைசியில் அரசு ஒப்புக்கொண்டது.
போலி அடையாளத்துடன் வாழ்ந்தவர் பலி
இந்நிலையிஸ், ஐசி-814 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திய பயங்கரவாதிகளுள் ஒருவரான மிஸ்ட்ரி ஸஹூர் இப்ராஹிம், மார்ச் 1ஆம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கராச்சி அக்தர் காலனியில், அடையாளம் தெரியாத ஒருவர், இப்ராஹிம் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அதில், இரண்டு குண்டுகள் இப்ராஹிமின் தலையில் பாய்ந்து அவர் உயிரிழந்துள்ளார். மேலும், இப்ராஹிம் கராச்சியில் ஒரு போலி அடையாளத்துடன் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பாதுகாப்பில் இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது.
1999ஆம் ஆண்டு அந்த விமானத்தில், 15 பணியாளர்கள் உள்பட மொத்தம் 191 பேர் விமானத்தில் இருந்தனர். அதில், ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு படுகாயமடைந்தார். மேலும், சிலரும் காயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.