கார்தோம் : சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நடைபெறும் உள்நாட்டு போரால் சிக்கி உயிர் தப்ப போராடி வரும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி திட்டத்தின் மூலம் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு வசதியாக மத்திய வெளியுறவு அமைச்சகம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கட்டுப்பாட்டு அறை அமைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில், சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நடைபெற்ற போர் நிறுத்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து 72 மணி நேர போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த நேரத்தில் சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. அவ்வகையில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா போர்க் கப்பலும், விமானப் படையின் இரண்டு C130J வகை போர் விமானமும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
இதுவரை 11 பகுதிகளாக 2 ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கபட்டு உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. உள்நாட்டு போர் நடைபெறும் சூடான் தலைநகர் கார்தோமுக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரில் சிக்கிக் கொண்ட 121 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சல் மிகுந்த செயல்களால் போர்க் களத்தில் சிக்கிக் கொண்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு வசதியற்ற மிக குறுகிய வாடி சயிந்தா ஏவுதளத்தில் தரையிறங்கிய இந்திய விமானப் படையின் C-130J heavy-lift விமானம் இந்தியர்களை மீட்டு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஆபரேஷன் காவேரி திட்டத்தில் இண்டிகோ விமான நிறுவனமும் இணைந்து உள்ளது. ஆபரேஷன் காவேரி திட்டத்தின் ஒரு பகுதியாக ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து 231 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இண்டிகோ விமானம் தலைநகர் டெல்லியை வந்தடைந்தது.
சூடானில் இருந்து ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு சொந்த நாடு திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதுவரை 150க்கும் மேற்பட்ட அழைப்புகளை ஜெட்டாவில் உள்ள இந்திய கட்டுப்பாட்டு மையம் மூலம் கையாண்டு மீட்பு பணிகள் மேற்கொண்டு உள்ளதாகவும் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க : Rajinikanth: "அரசியல் பேச நினைக்கிறேன்; ஆனால் அனுபவம் தடுக்கிறது" - ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!