சண்டிகர்: 90ஆவது விமானப்படை தினத்தையொட்டி இன்று(அக்.8), பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள விமானப்படை தளத்தில் அணிவகுப்பு நடைபெற்றது. முதல்முறையாக டெல்லிக்கு வெளியே விமானப்படை தின அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி கலந்து கொண்டு அணிவகுப்பை பார்வையிட்டார்.
பின்னர் வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், "அக்னிபாத் திட்டம் மூலம் விமானப்படையில் வீரர்களை சேர்ப்பது சவாலாக உள்ளது. ஆனால், இந்தியாவில் உள்ள இளைஞர்களின் சக்தியை பயன்படுத்திக் கொள்ள இது நல்ல வாய்ப்பு.
அடுத்த ஆண்டு முதல், பெண் அக்னி வீரர்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டு டிசம்பரில், முதற்கட்ட பயிற்சிக்காக 3,000 அக்னிவீரர்களை சேர்க்கவுள்ளோம். இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிக்கும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், இந்திய விமானப்படையில் அதிகாரிகளுக்கான ஆயுத அமைப்புக் கிளையை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிவிப்பது எனது பாக்கியம். சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக ஒரு புதிய செயல்பாட்டுக் கிளை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிளையின் மூலம் விமானப்படையின் பயிற்சிக்கான செலவீனங்கள் குறைந்து 3,400 கோடி ரூபாய்க்கும் மேல் சேமிக்கப்படும்.
முப்படைகளின் ஒருங்கிணைந்த போர் ஆற்றலைப் பயன்படுத்த திட்டமிட வேண்டிய அவசியம் உள்ளது. மூன்று படைகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று கூறினார்.
இதையும் படிங்க:டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் - ஊடக நிறுவனத்தில் சோதனை!