டெல்லி : கடந்த சில நாட்களாக நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவாக நேற்று (மார்ச் 30) தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 95 பேர் கரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ள அறிக்கையின்படி கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 208 ஆக அதிகரித்து உள்ளது. கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உள்ளது. ஆயிரத்து 390 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பரவலின் தீவிரத்தன்மை அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மாநில சுகதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முதல் கட்டமாக மருத்துவமனைகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. மருந்துகள், ஆக்சிஜன், படுக்கை வசதி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு குறித்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பொதுவெளியில் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த சில நாட்களாக பரவல் விகிதம் அதிகரித்து காணப்படும் நிலையில், மாநில சுகாதார அமைச்சகங்கள் விழிப்புடன் செயல்படுமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழ் நாட்டிலும் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக பரவல் கரோனா வழக்குகள் 100 ஐ தாண்டி பதிவாகின்றன. இருப்பினும் கொத்து கொத்தாக பரவும் கிளஸ்டர் வகை கரோனா தமிழகத்தில் பரவவில்லை என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் இலங்கையில் இருந்து வந்த ஒருவர் உள்பட 123 பேருக்கு புதிதாக தொற்று பரவியதாக சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 726 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், 86 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்றுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை வரும் நோயாளிகள் மட்டும் அவர்களுடன் வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க : பொம்மனிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை திடீர் மரணம் - வனத்துறை விளக்கம் என்ன?