உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தாக்குதல் நடத்திவரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது. போர் நடைபெறும் இடங்களில் சிக்கியுள்ள வேற்று நாட்டவர்களுக்கும் உதவிகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டுவருகிறது.
அதன்படி, உக்ரைனில் படித்துவந்த பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி அஸ்மா ஷபிக் என்பவரை இந்திய தூதரக அதிகாரிகள் மீட்டுள்ள சம்பவம் பாராட்டுகளை பெற்றுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்விலிருந்து மேற்கு பகுதி நோக்கி தப்பி சென்ற போது அவருக்கு இந்திய தூதரகம் கைக்கொடுத்து பத்திரமாக போர் பகுதியிலிருந்து மீட்டுள்ளது. அவர் விரைவில் தாய் நாடான பாகிஸ்தான் செல்லவுள்ளார்.
இது தொடர்பாக மாணவி அஸ்மா, " கீவ்வில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எனக்கு சிக்கலான காலத்தில் பேருதவி புரிந்துள்ளனர். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
ஏற்கனவே, நேபாள நாட்டைச் சேர்ந்த ஏழு நபர்களை இந்திய தூதரகம் உக்ரைனிலிருந்து மீட்டு அந்நாட்டுக்கு அனுப்பிவைத்துள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள நபர்களை ஆப்பரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் மீட்டுவரும் இந்திய அரசு இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டுவந்துள்ளது.
இதையும் படிங்க: போர் பாதித்த உக்ரைனுக்கு பெரும் தொகையை நிதியுதவி - டி கேப்ரியோவின் மனித நேயம்