டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 7ஆம் தேதி தினசரி பாதிப்பு ஆறாயிரத்தை கடந்தது. கடந்த 8ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 6,155 ஆக அதிகரித்தது. நேற்று(ஏப்.9) நிலவரப்படி ஒரு நாள் பாதிப்பு 5,357 ஆக இருந்தது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 5,880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 35,199 ஆக உள்ளதாகவும், தினசரி பாதிப்பு விகிதம் 6.91 சதவீதமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 3,481 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 3.67 சதவீதமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை சுமார் 220 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 205 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.