பாலின சமத்துவம் தரவரிசையில் இந்தியா
கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் பல்வேறு துறைகளையும் மட்டுமல்ல; பெண்களின் வாழ்க்கை நிலைமைகளையும் பாழாக்கியுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் பாலின சமத்துவம் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) சமீபத்திய கூற்றுப்படி, மொத்தம் 156 நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய பாலின இடைவெளி தரவரிசையில் இந்தியா கடந்தாண்டைவிட 28 இடங்கள் குறைந்து 140ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 2020ஆம் ஆண்டில், 153 நாடுகளில், இந்தியா 112ஆவது இடத்தில் இருந்தது.
பாலின சமத்துவம் தரவரிசையில் மற்ற நாடுகள்
ஆசிய நாடுகளான பாகிஸ்தான் 153ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 156ஆவது இடத்திலும் உள்ளன. மறுபுறம், இந்தியாவைவிட மக்கள்தொகை குறைவாக உள்ள, வங்கதேசம் 56ஆவது இடத்தையும், நேபாளம் 106ஆவது இடத்தையும், இலங்கை 116ஆவது இடத்தையும், பூட்டான் 130ஆவது இடத்தையும் பிடித்து சிறந்து விளங்குகின்றன.
பாலின சமத்துவத்தில் முன்னேறியிருக்கும், ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, சுவீடன் போன்ற நாடுகளிலிருந்து இந்தியா நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
உலகளாவிய பெண்கள் வருவாய்
உலகளாவிய மதிப்பீடுகளின்படி, பெண்களின் வருவாயை ஆண்கள் வருவாயுடன் ஒப்பிடும்போது, அவை ஐந்தில் ஒரு பங்காக மட்டுமே உள்ளன. உலகில் பெண்கள் வருமானம் மிகக் குறைவாக இருக்கக்கூடிய கடைசி பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், 8.9 விழுக்காடு பெண்கள் மட்டுமே நிர்வாகப் பதவிகளில் பணியாற்றுகின்றனர்.
ஆனால், கரோனா காலத்தில் பணிக்குச் செல்லும் பெண்களின் வலிமை 22 விழுக்காடு குறைந்துள்ளது. இதற்கிடையில், 20 வயதை அடைவதற்கு முன்னரே பெரும்பான்மையான பெண்கள் தாய்மார்களாக மாறுவது போன்ற திடுக்கிடும் ஆய்வுகள் பாலின சமத்துவத்திற்குப் பெரும் தடையாக உள்ளன.
முன்னேற்றத்தில் பெண்கள்:
ஒருபுறம் ஆண், பெண் கல்வி இடைவெளி படிப்படியாக குறைந்துவருகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி 34.2 விழுக்காடு இருக்கும் பெண் கல்வியறிவுடன் ஒப்பிடும்போது ஆண்களின் கல்வியறிவு 17.6 விழுக்காடு மட்டுமே உள்ளது.
எனவே, இந்தியா பெண்களின் கல்வி, திருமண வயது, சுதந்திரத்தில் கவனம் செலுத்துவது போலவே, பொருளியல், அரசியல் சார்ந்த காரணிகளிலும், பணிகளிலும் பெண்களுக்குச் சம உரிமை அளிக்க வேண்டும். அதற்காக இந்தியப் பெண்கள் எப்போதே தயாராகிவிட்டனர்.
இதையும் படிங்க: மூன்று நாள்கள் டாஸ்மாக் விடுமுறை: வழக்கமான விற்பனை!