காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று (மே.10) நடைபெற்றது. இதில், கோவிட்-19 இரண்டாம் அலை பரவல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது, ”பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அலட்சியத்திற்கான பெரும் விலையை இந்தியா தற்போது சந்தித்து வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் பாதிப்பு மிகவும் மோசமடைந்துள்ளது. நிபுணர்களின் எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டு, கூட்டம் அதிகம் கூடும் நிகழ்வுகள் நடைபெற மத்திய அரசு அனுமதித்தது பெரும் தவறு. இதன் காரணமாக நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பு நிலைகுலைந்துள்ளது.
இந்தச் சூழலில் பல நிபுணர்கள் மூன்றாம் அலை வரும் எனவும் எச்சரிக்கிறார்கள். இந்தச் சூழலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியின் அனைத்து தொண்டர்களும் நாட்டு மக்களுக்கு தோள்கொடுக்க வேண்டும்.
இக்கட்டான சூழலில் உதவிய அனைத்து சர்வதேச நாடுகள், அமைப்புகளுக்கு காங்கிரஸ் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.