டெல்லி: தென் ஆப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான், வெறும் இரண்டு வாரத்தில் 100 நாடுகளுக்கும் மேல் பரவிவிட்டது. இந்தியாவில் கடந்த வாரத்தில் 100 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் 961 பேருக்கு உறுதியாகி உள்ளது. குறிப்பாக, நேற்று மட்டும் 180 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நாளை இந்தியா முழுவதும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,000 கடக்க வாய்ப்புள்ளது. டெல்லியில் அதிகபட்சமாக 263 பேருக்கும், மகாராஷ்டிராவில் 252 பேருக்கும், குஜராத்தில் 97 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜஸ்தான், கேரளா, தெலங்கானா மாநிலத்தில் தொற்று பாதிப்பு உயர்ந்துவருகிறது.
மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று
இதனிடையே 49 நாள்களுக்குப் பிறகு கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,000ஐ கடந்துள்ளது. குறிப்பாக, டெல்லி, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிாரா மாநிலங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளது.
இதனை கருத்தில்கொண்டு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிவருகின்றன. அதேபோல உலக நாடுகளிலும் கரோனா அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் சில வாரங்களிலேயே பாதிப்பு எண்ணிக்கை 1.5 லட்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.
இதையும் படிங்க: அபாய கட்டத்தில் ஒமைக்ரான் பரவல்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை