டெல்லி: தேசிய தலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஜன.01) காலை அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால் ரயில் சேவையில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டுள்ளது. டெல்லியின் தட்பவெப்ப நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,“குறைந்தபட்ச வெப்பநிலை 8 முதல் 9 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடர்த்தியான மூடுபனி காரணமாக, ஆனந்த் விஹார், நிஜாமுதீன் மற்றும் டெல்லி நிலையங்களுக்குச் செல்லும் பல ரயில்கள் 4 மணி நேரம் தாமதமாக வந்ததாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் 51 மீட்டர் தொலைவில் உள்ள தூரத்தைப் பார்க்க முடியாத அளவிற்கு அடர்ந்த புகைமூட்டம் காணப்படுகிறது.”
கடும் பனி குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளத்தில், “பஞ்சாப், வடக்கு ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார், வடமேற்கு மத்தியப் பிரதேசம், தெற்கு உத்தரகண்ட், இமயமலை, மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் இன்று மூடுபனி நிலவும்” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கடும் பனி காரணமாக ரயில் சேவை ரத்தானது குறித்து பயணி ஒருவர் கூறுகையில், “வாரணாசியில் அடர்ந்த மூடுபனி நிலவுகிறது. இதன் காரணமாகப் பல ரயில்கள் தாமதமாகச் செல்கிறது. கடந்த 3 முதல் 4 நாட்களாக வட இந்தியா முழுவதும் பனிமூட்டம் அதிகமாக உள்ளது” என்று கூறினார். முன்னதாக, 2023 ஆம் ஆண்டின் கடைசி நாளில், நகரின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தர்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கருந்துளை ஆய்வுக்கான 'எக்ஸ்போசாட்' செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்!