ஒலிம்பிக்ஸ் 2020 போட்டி கடந்தாண்டு ஜூலை 24ஆம் தேதி டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் பரவிய கரோனா தொற்று பாதிப்பால், போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் வருகிற ஜூலை 23ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடத்திட ஒலிம்பிக் குழு திட்டமிட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக, ஒலிம்பிக் போட்டிகள் நடத்திட கடும் எதிர்ப்பு நிலவிவரும் நிலையிலும், போட்டியை நடத்திட ஒலிம்பிக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் திட்டவட்டமாக உள்ளனர்.
50 நாள்களில் டோக்கியோ ஒலிம்பிக்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 50 நாள்கள் இருக்கும் நிலையில், போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கான சீருடை உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் (கிட்ஸ்) வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று (ஜூன் 3) நடந்தது.
இதில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
190 பேர் கொண்ட வலுவான இந்திய அணி
இது தொடர்பாக பேசிய இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா, "டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவிலிருந்து பங்கேற்க இதுவரை 100 பேர் (56 வீரர்கள், 44 வீராங்கனைகள்) தகுதிபெற்றுள்ளனர்.
இன்னும் ஓரிரு வாரங்களில் தகுதிச்சுற்று நடைமுறைகள் நிறைவு பெற்றுவிடும். மொத்தம் 125 முதல் 135 பேர் வரை தகுதிபெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பயிற்சியாளர்கள், உதவிப் பயிற்சியாளர்கள், அலுவலர்கள் உள்பட ஏறக்குறைய 190 பேர் கொண்ட வலுவான இந்திய அணி ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பப்படவுள்ளது" எனத் தெரிவித்தார்.
டோக்கியோ செல்லும் குழுவுக்கு விரைவாகத் தடுப்பூசி
இந்நிலையில், போட்டிக்கு இந்தியாவின் தயார் நிலை மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆய்வுசெய்தார். அப்போது, பயிற்சிகள் வழங்கப்படுவதையும், தடுப்பூசி நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.
மேலும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்காகப் பயணம் மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்கள், வாய்ப்புள்ள வீரர்கள், உதவியாளர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் வெகு விரைவில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார்.
வீரர்களுடன் பேசவுள்ள பிரதமர் மோடி
ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளவிருக்கும் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்க அவர்களுடன் காணொலி வாயிலாகப் பிரதமர் கலந்துரையாடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.