இம்பால் : மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஆய்வு செய்ய சென்ற எதிர்க்கட்சிகளின் இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியின் 21 பிரதிநிதிகள் இம்பால் நகருக்கு விரைந்தனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ள கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து இந்த குழு கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் கலவரம் வெடித்து வருகிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கூடாது என வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்த கலவரச் சம்பவங்களில் சிக்கி 170க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தகவல் கூறப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, பாதுகாப்பு தேடி முகாம்களில் வசித்து வருகின்றனர். ஏறத்தாழ 3 மாதங்களாக நீடித்து வரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு போராடி வருகிறது.
கடந்த மே மாதம் பழங்குடியினப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்தும், பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன.
இருப்பினும் மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கொடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார் என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு இன்று (ஜூலை 29) மற்றும் நாளை (ஜூலை. 30) எதிர்க்கட்சிகளின் இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியின்(I.N.D.I.A) எம்.பி.க்கள் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இன்று (ஜூலை. 29) மணிப்பூருக்கு எதிர்க்கட்சிகள் கூட்டணியின் 21 எம்.பிக்கள் அடங்கிய குழு புறப்பட்டது. இந்நிலையில், மாநிலத்தின் இம்பால் விமான நிலையத்திற்கு எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதிநிதிகள் குழு அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்மைக்காலமாக நடந்த இன வெறித் தாக்குதல்களில் பாதிப்படைந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அவர்களுடன் இந்த குழுவினர் கலந்துரையாட உள்ளதாகவும், கலவரம் பாதித்த இடங்களை ஆய்வு செய்யவும் இந்த குழு திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக விமான நிலையத்திற்கு வந்த பிரதிநிதிகள் குழுவை மணிப்பூர் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ஒக்ரம் இபோபி வரவேற்றார். மாநிலத்தில் நிலவும் கலவரச் சம்பவங்கள் தொடர்பாகவும், முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலகக் கோருவது தொடர்பாகவும் பிரதிநிதிகள் குழுவிடம் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : "ராகுலுக்கு பெண் தேடுங்கள்" விவசாய பெண்களிடம் சோனியா காந்தி... ராகுல் கொடுத்த ஸ்பெஷல் விருந்து!