பெங்களூரு: சிறுதானியங்கள் தயாரிப்பில் உலகிலேயே இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. ஒரு ஆண்டு 13 - 14 மில்லியன் டன் சிறுதானியங்களை இந்தியா தயாரிக்கிறது என இந்திய சிறுதானியங்கள் ஆராய்ச்சி மைய இயக்குநர் விலாஸ் டோனபி தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் பேசிய அவர், சிறுதானியங்கள் பயிரிடப்படும் நிலங்களை விரிவுபடுத்த வேண்டும். சிறுதானியங்களை உட்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிறுதானியங்கள் அறுவடையை விரைவில் 40% உயர்த்த வேண்டும். இந்தியாவின் 14 மாநிலங்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
சிறுதானியங்கள் அதிக ஊட்டச்சத்தை கொண்ட பயிர்கள் ஆகும். அதை எந்த சுவையிலும் சமைக்க முடியும். அதிலுள்ள ஊட்டச்சத்து காரணமாகவே அதிகமாக மக்களை சென்றடைகிறது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுதானியங்கள் மிக முக்கிய உணவாக இருக்கிறது. அதேபோல் இவை புற்றுநோய்க்கு எதிரான சக்தியை கொண்டது என்றார்.
மேலும் அவர், 2023 சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்படும். அதற்குள் சிறுதானியங்கள் பயிரிடப்படும் நிலங்களை விரிவுபடுத்தி, தயாரிப்பை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.