கடந்த ஜனவரி மாதம், இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழர் விவகாரம் குறித்து பேசினார்.
இந்நிலையில், தமிழர்கள் சமமாகவும் நியாயமாகவும் அமைதியாகவும் வாழ இலங்கையை தொடர்ந்து வலியுறுத்திவருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கை தமிழர் விவகாரம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், "இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
அங்கு அமைதியை நிலைநாட்ட இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என அவர் உறுதி அளித்துள்ளார். 13ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றி உண்மையான அதிகார பகிர்வுக்கு வழிவகுப்போம் என இலங்கை அரசு உறுதிமொழி அளித்திருந்தது" என்றார்.
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு என்பது 13ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த 1987ஆம் ஆண்டு, இந்தியா, இலங்கை ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் 13ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் உருவானது.