டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் 96ஆவது பதிப்பில் நேற்று (டிசம்பர் 25) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், 2022ஆம் ஆண்டு உண்மையிலேயே பல காரணங்களுக்காக மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக அமைந்திருந்தது. இந்த ஆண்டிலே, இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடியது. நமது அமுதகாலமும் தொடங்கியது. இந்த ஆண்டிலே உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் வரிசையில் இந்தியா ஐந்தாம் இடத்தைப் பிடித்தது. 220 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகளை செலுத்தி இலக்கைத் தாண்டிச் சாதனை படைத்தோம். அனைவரும் தற்சார்பு இந்தியா என்ற மனவுறுதியை மேற்கொண்டோம். அதன்படி நடந்துவருகிறோம்.
குறிப்பாக, நமது நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கடற்படையில் இணைக்கப்பட்டது. உலகளவில் பாதுகாப்பு ட்ரோன்கள் உருவாக்கத்தில் தனி இடம் பிடித்தோம். இந்த 2022ஆம் ஆண்டிலே 400 பில்லியன் டாலர்கள் என்ற வியத்தகு ஏற்றுமதி இலக்கை அடைந்தோம். விளையாட்டு போட்டிகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். அது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளாகட்டும் அல்லது நமது பெண்கள் ஹாக்கி அணியின் வெற்றியாகட்டும், நமது இளைஞர்கள் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவை குறிக்கும் வகையில் 6 கோடிக்கும் அதிகமானோர் மூவண்ணக்கொடியோடு செல்ஃபி புகைப்படத்தை மக்கள் பகிர்ந்தார்கள். ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறோம். அடுத்த மனதின் குரல் நிகழ்ச்சி 2023ஆம் ஆண்டில் நடக்கிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நேபாள பிரதமராக இன்று பதவியேற்கிறார் பிரசந்தா