ஹைதராபாத்: டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் இன்னிங்சை தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் தொடங்கினர். பெரிய அளவில் சோபிக்காத கேப்டன் ரோகித் சர்மா 34 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 8 ரன்கள், இஷான் கிஷான் 5 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி லேசாக ஆட்டம் கண்ட நிலையில் மறுபுறம் மட்டையை சுழற்றிய தொடக்க வீரர் சுப்மான் கில், நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை கலங்கடித்தார். நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டு பவுண்டரி மற்றும் சிக்சர்கள் மூலம் அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார். அவருக்கு பக்கபலமாக ஹர்த்திக் பாண்டியா( 28 ரன்), வாஷிங்டன் சுந்தர்(12 ரன்), தாக்கூர்(3 ரன்) இருக்க, 87 பந்துகளில் தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை சுப்மான் கில் அடித்தார்.
தொடர்ந்து நியூசிலாந்து பந்துவீச்சை சிதறவிட்ட சுப்மான் கில், ஹாட்ரிக் சிக்சர் அடித்து தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார். 145 பந்துகளில் 200 ரன்களை கடந்த சுப்மான் கில், மைதானத்தில் இருந்த ரசிகர்களை குதூகலிக்கச் செய்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது.
நட்சத்திர வீரர் சுப்மான் கில் 149 பந்துகளில் 19 பவுண்டரி, 9 சிக்சர் என தெறிக்கவிட்டு 208 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் 19 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுப்மான் கில் பெற்றார். சர்வதேச அளவில் இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் சுப்மான் கில் படைத்தார்.
இதற்கு முன் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் 24 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்து இருந்தனர். தற்போது இந்த சாதனையை பின்னுக்குத் தள்ளி சுப்மான் கில் புதுமைல் கல் படைத்துள்ளார். அதேபோல் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் சுப்மான் கில் பெற்றார்.
இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் (200 ரன்), வீரேந்திர சேவாக் (219 ரன்) ரோகித் சர்மா (208, 209, மற்றும் 264 ரன்கள்) இஷான் கிஷான் (210 ரன்) ஆகியோர் இரட்டை சதம் அடித்து இருந்தனர். இந்த வரிசையில் தற்போது இளம் வீரர் சுப்மான் கில்(208 ரன்) இணைந்துள்ளார். 350 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வரும் நியூசிலாந்து அணி 7 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.
இதையும் படிங்க: IND VS SL 3rd ODI: இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி...