ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்த பூனாராம்(55), அவரது மனைவி பன்வாரி தேவி (50), இவர்களது மருமகள் தாபு (24) மற்றும் பிறந்து 7 மாதங்களே ஆன பேத்தி ஆகிய நான்கு பேரும் இன்று(ஜூலை 19) அதிகாலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, மர்மநபர்கள் சிலர் இவர்களது வீட்டிற்குள் புகுந்து, நான்கு பேரையும் படுகொலை செய்துள்ளனர். பிறகு, அவர்களது வீட்டிற்கு தீ வைத்துள்ளனர்.
காலையில் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டனர். மர்மநபர்கள் நான்கு பேரையும் கொலை செய்துவிட்டு, அவர்களது உடலை எரிப்பதற்காக வீட்டிற்கு தீ வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 7 மாத குழந்தையின் உடல் முற்றிலும் எரிந்துவிட்டதாகவும், மீதமுள்ள மூன்று பேரின் உடல்கள் பாதி எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த கொலைக்கான காரணம் என்ன? யார் கொலை செய்தார்கள்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குப்தாவும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.
இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை முதல் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால், ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்தது. உறங்கிக் கொண்டிருந்தபோது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெண்மணி ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். தன்னுடன் வரும்படி இரண்டாவது கணவர் அழைத்தபோது, அந்த பெண்மணி அவருடன் செல்ல மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த நபர், மனைவி, இரண்டு குழந்தைகள், மனைவியின் பெற்றோர் ஆகிய ஐந்து பேரையும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துவிட்டார்.