மும்பை: கட்டட வடிவமைப்பாளர் அன்வே நாயக் மரண வழக்கில் மும்பை காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் ஆங்கிலத் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் தலோஜா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் நேரடியாக தங்களது செய்தி நிறுவனத்தின் லோயர் பரேல் ஸ்டூடியோவிற்கு சென்றார்.
அங்கு பேசிய அவர், உத்தவ் தாக்கரே (மகாராஷ்டிர முதலமைச்சர்) என்னை கவனியுங்கள். நீங்கள் தோற்றுவிட்டீர்கள். நீங்கள் தோற்கடிக்கப்பட்டுவிட்டீர்கள்.
நான் மும்பை காவல் ஆணையர் பரம் பிர் சிங்கால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டேன். நான் தலோஜா சிறையிலிருக்கும்போது, மூன்று கட்டங்களாக விசாரணைக்கு உள்படுத்தப்பட்டேன்.
உத்தவ் தாக்கரே என்னை நீங்கள் முடிந்துபோன , பழைய வழக்கில் கைது செய்துள்ளீர்கள். அதற்காக என்னிடம் மன்னிப்பும் கேட்கவில்லை. இந்த விளையாட்டு இப்பொழுதுதான் ஆரம்பித்துள்ளது. நான் அனைத்து மொழிகளிலும் ரிபப்ளிக் தொலைக்காட்சியைத் தொடங்குவேன். பன்னாட்டு செய்தி நிறுவனத்தையும் தொடங்குவேன்.
நான் சிறையில் அடைக்கப்பட்டிருப்பினும் செய்தி தொலைக்காட்சிகளைத் தொடங்குவேன். உங்களால்( உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசால் ) ஒன்றும் செய்ய இயலாது" என காட்டமாகக் கூறினார்.
இதையும் படிங்க: ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணை!