கௌசாம்பி (உத்தரப் பிரதேசம்): என்னதான் நாடு ஒரு புறம் முன்னேற்றப் பாதைகளைக் கண்டாலும், பாதுகாப்பு, உரிமை போன்ற அடிப்படை விஷயங்களில் முன் நின்றாலும் இன்றளவிலும் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை குறைந்தபாடாக இல்லை. சட்டங்கள் உருபெற்றுள்ளது, தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது என எத்தனை கொண்டு வந்தாலும் இன்றளவிலும் பிற்போக்கு குணம் கொண்ட சிலரின் மத்தியில் மாற்றங்களை கொண்டு வருவதில் தோல்வியையே தலுவச் செய்துள்ளது.
எத்தனை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஆனையங்கள், சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு இருந்தாலும், இவை அனைத்தும் ஆணவக் கொலைகளின் கால்களில் மண்டியிட்டே உள்ளது. அந்த வகையில், கடந்த சனிக்கிழமை அன்று உத்திரப் பிரதேசம் கௌசாம்பி மாவட்டம் சாராய் அகில் என்ற கிராமத்தில் 17 வயது மகளை சொந்த தந்தை மற்றும் சகோதரர்கள் சேர்ந்து கோடாரியால் அடித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட மாணவி அதே பகுதியில் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞருடன் பலகி வந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் மாணவியை அடித்து மிரட்டியுள்ளனர். தொடர்ந்து மாணவி அந்த இளைஞருடன் பேசுவதைக் கண்டு ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை மற்றும் சகோதரர்கள் அருகிலிருந்த கோடாரி மூலம் மாணவியை தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரழிந்தார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மாவட்ட ஆட்சியர் சுஜித் குமாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் காவல் துறை கண்காணிப்பாளர் பிரிஜேஷ் குமார் ஸ்ரீவஸ்தவாவிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், கொலை செய்த தந்தை மன்றகான் மற்றும் இரு சகோதரர்களான கன்ஷ்யாம் மற்றும் ராதேஷ்யாம் ஆகியோரை கைது செய்தனர். மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது மாணவியை கொலை செய்ய பயன்படுத்திய கோடாரியை கைப்பற்றியுள்ளனர். இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வரும் காவல் கண்காணிப்பாளர் பிரிஜேஷ் கூறுகையில், "கொலை செய்யப்பட்ட மாணவி மாற்று சமூதாயத்தைச் சேர்ந்த இளைஞருடன் பலகி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தந்தை மற்றும் சகோதரர்கள் மாணவியை கோடாரியால் தாக்கி கொலை செய்ததை ஒப்பு கொண்டனர்.
மாணவியின் உடற்கூராய்விலும் இது நிருபணம் ஆகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடக்கும் முதல் ஆணவக் கொலை அல்ல இது. ஆணவக் கொலைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மற்றும் சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பிகார் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு.. இரு கைதிகள் காயம்!