உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன்-ரேனி பகுதியில் பிப்.7ஆம் தேதி காலை பனிப்பாறைகள் திடீரென உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி 67 பேர் உயிரிழந்த நிலையில், பனிப்பாறையின் ஆழத்தை அளவிட கடற்படையினரும் விமானப் படையினரும் கூட்டு முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்திய கடற்படையினர், கடல்மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் உள்ள பனிப்பாறையின் ஆழத்தை அளவிடும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தகவலை பயன்படுத்தி தபோவன் அணையின் அழுத்தத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவுள்ளனர்.
இந்த சவாலான முயற்சியில் ஈடுபட்ட கடற்படையினர், ஆழத்தை அளவிடும் உபகரணத்துடன் பனிப்பாறையின் மீது ஏறினர். மிக கடினமான அந்த நிலபரப்பின் மேல் நடுவானில் மிக கச்சிதமாக ஹெலிகாப்டரை நிலைநிறுத்தி அளவிடும் முயற்சியை மேற்கொண்டனர்.