திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தின் பராவட்டனி என்ற பகுதியில் இயங்கி வரும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடையில் திருடர்கள் வீட்டிற்குத்தேவையான பொருட்களை மட்டும் திருடியுள்ளனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
இரவு நேரத்தில் பூட்டிய கடைக்குள் நுழைந்த 2 திருடர்கள் தேடித்தேடி ஒரு வீட்டில் உபயோகப்படுத்தப்படக்கூடிய பொருட்களை மட்டும் எடுக்கின்றனர். இவர்களுக்காக வெளியே மூன்றாவதாக ஒரு நபர் காத்துக்கொண்டிருக்கிறார்.
அவர்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்தபின்பு கல்லாபெட்டியில் இருந்த ரூ.3000 பணத்தையும், ஒரு செல்போனையும் திருடியுள்ளனர். இவர்கள் திருடிய பொருட்களை வெளியே உள்ள நபர் பெற்றுக்கொண்டு இயல்பாக ஆட்டோ பிடித்துச்சென்றார். இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இது குறித்த கடையின் உரிமையாளர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 'சனிக்கிழமை(ஜூலை 2) காலையில் கடையைத் திறந்து பார்த்த போது பல பொருட்கள் அவை அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடங்களில் இருந்து அலைந்து கிடந்தன. மேலும் பல பொருட்கள் குறைந்ததாகத் தோன்றியது.
இதனையடுத்து எங்களுக்கு சந்தேகம் வந்ததால் சிசிடிவியை சோதித்து பார்த்தோம். திருட வந்த இரண்டு திருடர்களும் அவர்களுக்குத் தேவையான பொருட்களைத் தேடித்தேடி எடுத்து கடையின் ஒரு மூலையில் வைத்துக்கொண்டனர். அதில் கேஸ் ஸ்டவ், சில்வர் பாத்திரங்கள், குக்கர், மற்றும் பல பொருட்கள் இருந்தன. அவர்கள் ஒட்டுமொத்தமாக திருடிய பொருட்களின் மதிப்பு ரூ.80,000 ஆகும்’ எனத் தெரிவித்தார்.
நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த திருட்டு நடைபெற்றுள்ளது. இது குறித்து அப்பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விநோத திருட்டுச்சம்பவம் அப்பகுதியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மனைவியின் 17 சவரன் நகைகளைத் திருடிய கணவன்.. ஆன்லைன் சூதாட்டத்தில் அழித்தது அம்பலம்!