கவுகாத்தி: உலகிலேயே அதிக அளவிலான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள், அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ளன. இங்கு மொத்தம் மூன்றாயிரத்திற்கும் அதிகமான ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன.
அவற்றை, இந்த ஆண்டு இறுதிக்குள் நான்காயிராமாக அதிகரிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
செயற்கைக்கோள் தொலைபேசி
அந்த வகையில், கடந்த மே 27ஆம் தேதி முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில், காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுதலைத் தவிர்க்கவும், மருத்துவ உதவிகளுக்காகவும் வன அலுவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று (ஆகஸ்ட்.11) 16 லட்சம் ரூபாய் மதிப்பில் 10 செயற்கைக்கோள் தொலைபேசிகள் வாங்கப்பட்டு, வன அலுவர்களுக்கு வழங்கப்பட்டன. இதன் மூலம் பூங்காவின் எந்த மூலையிலிருந்தும் எளிதாக அவசர உதவிக்கு அலுவர்களை அழைக்க முடியும். உடனடியாக மருத்துவ உதவிகளையும் ஏற்பாடு செய்யவும் முடியும்.
அசாம் மக்களும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களும்...
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அசாமின் பெருமிதமாக (Pride of Assam) கருதப்படுகிறது. அசாம் மக்களுக்கும் இந்த காண்டாமிருகங்களுக்கும் உணர்வுப்பூர்வமான பிணைப்பு உள்ளது.
அம்மாநில மக்களால் ஒரு காண்டாமிருகம் வேட்டையாடப்படுதலை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக காண்டாமிருகத்திற்கென அங்கு பல கதைகள் உள்ளன. சொல்லப்போனால், தேர்தல் வாக்குறுதியிலும் 'காண்டாமிருகத்தை பாதுகாப்போம்' என்பது இடம்பெற்றிருக்கும்.
இதையும் படிங்க: அஸ்ஸாம் பூங்காவில் நுழைந்த வேட்டைக்காரர்கள்... காண்டாமிருகத்தை சுட்டுக்கொன்று கொம்பை வெட்டிய கொடூரம்!