கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி, கரோனில் மருந்தை பதஞ்சலி நிறுவனர் ராம்தேவ் அறிமுகம் செய்தார். அந்நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, கரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், கரோனா சிகிச்சைக்காக எந்த ஒரு பாரம்பரிய மருந்தையும் ஆய்வு செய்யவில்லை என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்தது.
இந்நிலையில், கரோனில் மருந்து அறிமுக விழாவில் கலந்து கொண்ட ஹர்ஸ் வர்தனிடம் இந்திய மருத்துவ கழகம் பொய்யான தகவல் குறித்து விளக்கம் கேட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருத்தவ கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவராக உள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் முன்பே, உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியதாக அப்பட்டமான பொய் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
ஹர்ஸ் வர்தன் விளக்கம் அளிக்க வேண்டும். இது நாட்டு மக்களை அப்பட்டமாக ஏமாற்றும் முயற்சியாகும். இந்த விதிமீறல் குறித்து தானாக முன்வந்து அவரிடம் விளக்கம் கேட்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் கடிதம் எழுதியுள்ளோம்.
ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கு முன்பு, இம்மாதிரியான பொய் தகவலை பரப்புவது எப்படி சரியாக இருக்க முடியும்? அறிவுக்கு ஏற்புடையதாக இருக்க முடியும்? விஞ்ஞானத்திற்கு எதிரான இட்டுக்கப்பட்ட ஒரு மருந்தை வெளியிடுவதை ஒரு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக எப்படி நியாயப்படுத்த போகிறீர்கள்? கரோனில் பயனளிப்பதாக இருந்தால், அரசு ஏன் 35,000 கோடி ரூபாயை தடுப்பூசிக்காக செலவு செய்ய வேண்டும்?" என குறிப்பிட்டுள்ளது.