ஹைதராபாத்: கோவிட் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. நாடு முழுக்க பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவர் சங்கம் (ஐஎம்ஏ), பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியது.
அதில் கோவிட்-19 வைரஸினால் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து வெள்ளிக்கிழமையை (ஜூன் 18) தேசிய எதிர்ப்பு தினமாக அனுசரித்தனர். “இரட்சகரை (பாதுகாப்பாளர்களை) பாதுகாப்போம்” என்ற கருப்பொருளில் இந்தத் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, “மருத்துவர்கள், தொழில்முறை வல்லுநர்கள் மீதான வன்முறையை நிறுத்துங்கள்” என்ற பதாகைகளையும் கைகளில் அவர்கள் ஏந்தியிருந்தனர்.
இந்தப் போராட்டத்தை தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள இந்திய மருத்துவர் சங்கத்தின் அலுவலகத்தில் சுகாதார ஊழியர்களும், மருத்துவர்களும் கறும்பட்டை அணிந்து பணிபுரிந்தனர். இது குறித்து ஐஎம்ஏ செயலாளர் நரேந்திர ரெட்டி கூறுகையில், “மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகள் பிணையில் வெளிவர முடியாத குற்றமாக இருக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் பிணை கிடைக்காது என்று இருந்தால் வன்முறையாளர்கள் பயப்படுவார்கள். இதுபோன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட மாட்டார்கள்” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டம் நாடு முழுக்க நடந்தது. இந்தியாவில், பிகார், மேற்கு வங்கம், அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் கோவிட் வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது 730 மருத்துவர்கள் இறந்துள்ளனர். அதில், பிகாரில் 115 மருத்துவர் இறப்புகள் பதிவாகியுள்ளன, டெல்லியில் 109 பேர் உயிரிழந்துள்ளனர், உத்தரப் பிரதேசத்தில் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் மாநிலங்களில், ஆந்திரா 38, தெலுங்கானா 37, கர்நாடகா 9, கேரளா 24, மற்றும் ஒடிசா 31 என உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் 23 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா 2ஆம் அலையில் 730 மருத்துவர்கள் உயிரிழப்பு