டேராடூன்: உலகின் சிறந்த ராணுவ அலுவலர்களை உருவாக்குவது என்பது ஒன்றும் எளிய வேலை இல்லை. ஆனால், இந்தப் பணியை டேராடூனிலுள்ள இந்திய ராணுவ அகாடமி கடந்த 88 ஆண்டுகளாக சிறப்பாக மேற்கொண்டுவருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 1400 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த ராணுவ அகாடமியில் இருந்து ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான சிறந்த ராணுவ வீரர்கள் நம்பிக்கை மற்றும் துணிச்சலுடன் ராணுவத்தில் இணைக்கின்றனர்.
இந்த ராணுவ அகாடமி வரலாற்று ரீதியாக மட்டும் சிறப்பு பெற்றதில்லை. இது ஆண்டுதோறும் உலகத்தரம் வாய்ந்த ராணுவ அலுவலர்களை உருவாக்கும் சிறந்த ஒரு பயிற்சி மையமாகும். இந்த அகாடமி ஒருவரை அனைத்து தரப்பில் மிகச் சிறந்த வீரனாக்குகிறது, மேலும் எந்த சவாலையும் ஏற்கும் திறன் கொண்ட போர் வீரர்களாகவும் மாற்றுகிறது.
கடந்த 1932ஆம் ஆண்டு இந்த அகாடமி தொடங்கப்பட்டபோது, வெறும் 40 பேர் மட்டுமே இதில் பயிற்சி பெற்றனர். 1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் முக்கிய வீரராக திகழ்ந்த சாம் மானேக்ஷா டேராடூனில் முதல் பேட்ஜில் பயிற்சி பெற்ற வீரர். பர்மிய ராணுவத் தளபதியாக இருந்த ஸ்மித் டன், பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஹம்மது மூசா கான் ஆகியோரும் டேராடூன் முதல் பேட்ஜில் பயிற்சி பெற்றவர்கள்.
இதுவரை இந்த அகாடமியில் இருந்து 2,500 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 62 ஆயிரம் ராணுவ வீரர்கள் பயிற்சி பெற்று, சிறந்த வீரர்களாக உருபெற்றுள்ளனர்.
மகாபாரத கதையில், துரோணாச்சாரியர் கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இங்குதான் பயிற்சி அளித்தார் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது, அதே இடத்தில் ராணுவ அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு போரில் உயிரிழந்த வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட ஒரு போர் நினைவுச்சின்னமும் கட்டப்பட்டுள்ளது. வளாகத்தில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு கடந்த 88 ஆண்டுகளில் நடைபெற்ற பல முக்கிய நினைவுகளை காட்சிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் சரணடைந்தது. அப்போது கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் நாட்டு கொடியும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது கரோனா பெருந்தொற்றின் போதும் கூட ராணுவ பயிற்சி எந்த முறையிலும் தடைப்படவில்லை. கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, வெளியில் இருந்து யாருக்கும் உள்ளே வர அனுமதியளிக்கப்படவில்லை என்கிறார் ராணுவ வீரர் ராமன் கக்கர். ஏற்கனவே உள்ளே இருந்த ஊழியர்களுடன் பணிபுரிந்ததால், அகாடமியில் உள்ளே கரோனா பரவல் ஏற்படாமல் தடுக்க முடிந்தது.
மேஜர் நிதீஷ் விஜ் கூறுகையில், "இங்கு நாங்கள் அளிக்கும் பயிற்சி, ஆண்களை நல்ல மன ஆரோக்கியத்திலும் வைத்திருக்க உதவுகிறது" என்றார்.
இந்த அகாடமி இதுவரை 16 ராணுவ தளபதிகளை உருவாக்கியுள்ளது. சீனா போன்ற நாடுகள் நம்மை கண்டு பயப்படுவதற்கு முக்கிய காரணம் இந்த அகாடமி அலுவலர்கள் தான்.
இப்படி பல சிறப்புகளை கொண்ட இந்த ராணுவ அகாடமியில் பயிற்சிகளை முடித்துவிட்டு, இன்று 395 பேர் வெளியேறுகின்றனர். அவர்களில் 70 பேர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
அவர்களில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து 24 பேர், உத்தரப் பிரதேசத்தில் இருந்து 50 பேர் என மொத்தம் 325 இந்திய வீரர்களும் அடக்கம்.
இந்த அகாடமியில் சேர நான்கு வழிமுறைகள் உள்ளன. ஒருவர் தனது பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் இருந்து, அவர் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த அகாடமியில் சேரலாம்.
அதேபோல 12ஆம் வகுப்பு தேர்வை முடித்தவர்களும் இதில் தொழில்நுட்ப உதவி பிரிவில் சேரலாம். பல்கலைக்கழக நுழைவுத் திட்டத்தின் கீழ் இறுதி ஆண்டிலும் அதற்கு முந்தைய ஆண்டிலும் படிக்கும் பொறியியல் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
குறிப்பிட்ட பிரிவுகளில் பொறியியல் படிப்பை முடிந்த மாணவர்கள் தொழில்நுட்ப பிரிவில் சேரலாம்.
இதையும் படிங்க: ஒப்பந்தத்தை மீறும் வகையில் சீனா செயல்பட்டது - இந்தியா பதில்!