நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் பாஜக பிரமுகர் ஶ்ரீகாந்த் தியாகி, குடியிருப்பு வளாகத்தில் பெண் ஒருவரை அநாகரீகமாக பேசி மிரட்டும் வீடியோ அண்மையில் வெளியானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, ஏராளமானோர் ஶ்ரீகாந்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்த விசாரணையில், பாஜக பிரமுகர் ஶ்ரீகாந்த் கடந்த 2019ஆம் ஆண்டு அடுக்குமாடிக் குடியிருப்பில் தனது வீட்டிற்கு முன்பு உள்ள பொதுவான இடத்தில் மரம் வளர்ப்பது, தூண்கள் அமைப்பது போன்றவற்றை செய்து குடியிருப்பு வாசிகளுக்கு தொந்தரவு அளித்து வந்ததாக தெரியவந்தது. அவரது ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் உள்ள ஶ்ரீகாந்த்தின் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் 15 நாட்களுக்குள் அகற்றும்படி நொய்டா மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று(ஆகஸ்ட் 7) மாலை, ஸ்ரீகாந்த் தியாகியின் நொய்டா இல்லத்திற்கு வெளியே உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்த குடியிருப்பு வாசிகள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக பாஜக பிரமுகர் ஶ்ரீகாந்த் தியாகி தலைமறைவாகிவிட்டார்.
இதையும் படிங்க: சிமென்ட் ஷீட்டை உடைத்த முதியவர் குடும்பத்தினரால் அடித்துக்கொலை!