திருவனந்தபுரம்: தமிழ்நாடு, புதுச்சேரியை போன்று கேரளத்திலும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சராக பினராயி விஜயன் உள்ளார்.
இங்கு, சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணி மற்றும் காங்கிரஸ் இடையே நேரடியாக போட்டி இருந்தாலும், கடந்த முறை அங்கு கணக்கை தொடங்கிய பாஜக, இம்முறை குறிப்பிடத்தக்க வெற்றியை பெற வேண்டும் என முனைப்பில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் பேசிய மத்திய அமைச்சர் சதானந்த கவுடா நேற்று (மார்ச் 22) கூறுகையில், “கேரளத்தில் வெளிப்படைதன்மையான ஜனநாயக ஆட்சி நடைபெறவில்லை. முதலமைச்சரவை சுற்றி இருக்கும் சிலர் ஆட்சி நடத்துகின்றனர். தங்கக் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் அலுவலகத்துக்கு நேரடி தொடர்பு உள்ளது. சபாநாயகர் மற்றும் சில அமைச்சர்கள் ஸ்வப்னா சுரேஷிடம் தொடர்பு வைத்திருந்தனர்.
கோயில்களை நிர்வகிக்கும் தேவசம்போர்டை அரசியல் அரங்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாற்றிவைத்துள்ளனர். இதெல்லாம் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றியமைக்கப்படும். உத்தரப் பிரதேசத்தை போன்று கேரளத்தில் லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படும்” என்றார்.