வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப்பெற, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடிவரும் நிலையில், வேளாண் திருத்தச் சட்டங்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்காவிட்டால், அதனை நிறுத்தி வைப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
வேளாண் திருத்தச் சட்டங்கள் குறித்து வழக்கு விசாரணை இன்று(ஜனவரி 11)உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, வேளாண் திருத்தச் சட்டங்களில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை விளக்கவேண்டும் எனக்கேள்வி எழுப்பினார்.
மேலும் வேளாண் திருத்தச் சட்டங்கள் சிறந்தவை என ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். அதேபோல், வேளாண் திருத்தச் சட்டங்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்காவிட்டால், அதனை நிறுத்தி வைப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் எனவும் மூன்றுபேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
வேளாண் திருத்தச் சட்டங்களை நிறுத்தி வைக்கத் தயாராக இருந்தால், விசாரிக்க குழு அமைக்கிறோம் என்றும்; சிலர் தற்கொலை செய்கின்றனர்; வயதானோர், பெண்கள் போராடுகின்றனர்; என்னதான் நடக்கிறது?என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு சரமாரியாக கேள்வி எழுப்பியது.
இந்நிலையில் 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும் நிறுத்தி வைக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.