ராஜமஹேந்திரவரம்( ஆந்திர பிரதேசம்): பண்டலப்பள்ளி ஸ்ரீனிவாஸ் எனும் வனத்துறை அதிகாரி, ஓர் அதிகாரி சுயநலமற்று மக்களுக்காக சேவை செய்தால் அவர்களின் மனதில் என்றும் நீங்காமல் வாழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
ஆந்திரபிரதேச மாநிலம் ராஜமஹேந்திரவரத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசிற்கு தமிழ்நாடு - கர்நாடகா எல்லையிலுள்ள சாமராஜ்நகர் மாவட்டத்தில் சந்தனமரக் கடத்தல்காரரான வீரப்பனின் சொந்த கிராமமான கோபிநத்தத்தில் சிலை வைத்து, மாரியம்மனுடன் சேர்த்து அந்த கிராமத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இப்படி வேற்று மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரிக்கு ஓர் கிராமமே இவ்வளவு மரியாதை செய்வதற்கு காரணம் அவர் இந்த கிராமத்துக்கு அளித்த பல நன்கொடைகள் தான். இந்த கிராமத்திற்கு அடிப்படையான கல்வி மற்றும் சுகாதாரத் தேவைகளை ஸ்ரீனிவாஸ் தனது பணிகாலகட்டத்தில் செய்துகொடுத்தார்.
2004ஆம் ஆண்டு வீரப்பன் மறைந்தபோது கோபிநத்தம் கிராமத்தினர் கொண்டாடினர். அதை விட அதிகமாகவே வீரப்பனால் கொல்லப்பட்ட வனத்துறை அதிகாரியான ஸ்ரீனிவாஸின் பிறந்த நாளை(செப்.12) கொண்டாடுவர். 1954ஆம் ஆண்டு அனந்த ராவ் - ஜெயலட்சுமி தம்பதியினருக்கு பிறந்தவர் தான் பண்டலப்பள்ளி ஸ்ரீனிவாஸ்.
இவர், 1979ஆம் ஆண்டு இந்திய வனத்துறைக்கு தேர்வுசெய்யப்பட்டு கர்நாடகாவில் பணியமற்றப்பட்டார். அதன் பின் 1986ஆம் ஆண்டு வீரப்பனை கைது செய்து பெங்களூர் அழைத்து வந்தார். அதற்கு பிறகு அங்கிருந்து தப்பித்த வீரப்பன், பல முறை ஸ்ரீனிவாஸைக்கொல்லத் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், வீரப்பனின் எந்த ஒரு திட்டமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. பின்பு ஒரு நாள் தான் சரணடையப்போவதாகக் கூறி ஸ்ரீனிவாசனை நம்பவைத்தார். இதனை நம்பிய ஸ்ரீனிவாஸ் எந்தவித ஆயுதமும் இல்லாமல் தனியாளாக வீரப்பனைக் காண நவம்பர் 9,1991ஆம் ஆண்டு சென்றார். அப்போது சமயம் பார்த்துக் காத்திருந்த வீரப்பன் அவரைக் கொலை செய்து தலையை அந்த கிராமத்தில் தொங்கவிட்டார்.
இதனையடுத்து, 1992ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஸ்ரீனிவாசுக்கு கீர்த்தி சக்ரா விருது அளித்தது. மேலும், வீரப்பனின் கிராமமான கோபிநத்தத்தில் கிராமத்து மக்கள் மாரியம்மனோடு சேர்த்து ஸ்ரீனிவாசின் புகைப்படத்தையும் வைத்து வழிபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி வருகிற செப்.11ஆம் தேதி ஸ்ரீனிவாசனின் வெங்கல உருவச் சிலையையும் அக்கிராமத்தில் நிறுவவுள்ளனர்.
ஏற்கனவே இவரது நினைவிடத்தை கர்நாடகா அரசு நிறுவியது. வனத்துறையும் அரசு விருந்தினர் மாளிகைக்கு இவரது பெயரை வைத்தது. ஸ்ரீனிவாசின் நினைவாக ஓர் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது, அங்கே அவர் பயன்படுத்திய வாகனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோபிநத்தம் கிராமத்திற்கு ஸ்ரீனிவாசின் சேவை அளப்பரியது.
பள்ளி, அடிப்படை சுகாதாரம், குடிநீர் வசதி, சிறு தொழிகளை கிராமத்தில் நிறுவியது என சொல்லிக் கொண்டே போகலாம். மாணவர்கள் மேற்படிப்பிற்கு படிக்க அவரால் ஊக்குவிக்கப்பட்டனர். நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டது. பல கடத்தல்காரர்கள் அந்தத் தொழிலை விட்டனர். இவ்வளவு காரியங்களை நிகழ்த்திக்காட்டியதால் தான் ஸ்ரீனிவாஸ் அந்த கிராமத்தின் நாயகானாக இன்றும் திகழ்கிறார்.