மும்பை: இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. அடுத்த மாதம் முதல் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நான்கு பெருநகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், எட்ஜ் கம்ப்யூட்டிங் சேவையை வழங்குவதற்காக, ஏர்டெல் மற்றும் ஐபிஎம் நிறுவனம் கைகோர்த்துள்ளன.
ஐபிஎம் கிளவுட் சாட்டிலைட்டின் உதவியுடன், ஏர்டெல் எட்ஜ் கம்ப்யூட்டிங் இயங்குதளம் செயல்படும் என்றும், இதற்காக 20 நகரங்களில் 120 டேட்டா சென்டர்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் பிசினஸ் நிறுவனத்தின் சிஇஓ கணேஷ் லஷ்மி நாராயணன் கூறுகையில், "இந்தியா 5ஜி சேவைகளைப் பயன்படுத்த தயாராகி வருகிறது. இந்த நிலையில் வணிக, சேவை நிறுவனங்கள் தங்களது சேவைகள் வழங்கும் விதத்தை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.
எங்களிடம் Nxtra பிராண்டின்கீழ் இந்தியாவில் கிடைக்கும் எட்ஜ் டேட்டா சென்டர்களின் மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது. நாங்கள் ஐபிஎம் உடன் கைகோர்ப்பதன் மூலம், இந்திய வணிக நிறுவனங்களின் முக்கியமான வணிகத் தேவைகளை, அதிக செயல்திறனுடன் நிவர்த்தி செய்வோம்" என்று கூறினார்.
ஐபிஎம் கிளவுட் பிளாட்ஃபார்ம் தலைவர் ஹோவர்ட் போவில்லே கூறுகையில், "ஏர்டெல்லுடன் இணைவதன் மூலம், ஐபிஎம்மின் ஹைபிரிட் கிளவுட் சலுகைகளை தங்கள் இந்திய மல்டி அக்சஸ் எட்ஜ் கம்ப்யூட்டிங் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு வர முடியும். 5ஜி மற்றும் எட்ஜ் கம்ப்யூட்டிங் மூலம், வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்று தெரிவித்தார்.
கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது, நமக்குத் தேவையான தரவுகளை நீண்ட நாட்களுக்கு சேமிக்கப் பயன்படும் தொழில்நுட்பமாகும். எட்ஜ் கம்ப்யூட்டிங் என்பது டேட்டாக்களின் செயல்திறன் மற்றும் அதனுடைய வேகம் என்ற இரண்டையும் அதிகரிக்கப் பயன்படும் தொழில்நுட்பமாகும். எட்ஜ் கம்ப்யூட்டிங்கை பயன்படுத்தும் பொழுது நமக்கு வேண்டிய தகவல்கள் அனைத்தும் விரைவாக ப்ராசஸிங் செய்யப்பட்டு, விரைவாக ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது.
இதையும் படிங்க:புதிய மேம்படுத்தப்பட்ட பிரைவசி அம்சங்களுடன் ஆப்பிள் iOS 16 அறிமுகம்!