இது தொடர்பாக வருமான வரித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கட்டுமான பொருட்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யும் புனே மற்றும் தானேவைச் சேர்ந்த யுனிகார்ன் ஸ்டார்ட்-அப் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை மார்ச் 9ஆம் தேதி சோதனை நடத்தியது. நாடு முழுவதும் கிளைகளை வைத்துள்ள இந்த குழுமத்தின் ஆண்டு வருவாய் ரூ.6,000 கோடியை தொட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இந்த குழுமத்துக்கு சொந்தமான 23 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சட்டவிரோதமாக போலியான முறையில் கொள்முதல் செய்யப்பட்டதற்கான பல ஆவணங்கள் சிக்கின. ரூ.400 கோடிக்கு மேல் கணக்கில் காட்டாமல் இந்த குழுமம் செலவு செய்துள்ளது.
மேலும், பல ஆண்டுகளில் ரூ.224 கோடி கூடுதல் வருமானம் ஈட்டியதையும், குழுமத்தின் இயக்குனர்கள் ஒப்புக் கொண்டு அதற்கான வரியை செலுத்த முன்வந்துள்ளனர். அதிக தொகைக்கு பங்குகளை விற்று மொரீசியஸ் வழியாக, வெளிநாட்டு நிதியையும் அதிகளவில் இந்த குழுமம் பெற்றுள்ளது வருமானவரித்துறை சோதனையில் தெரியவந்தது.
இந்த சோதனையில் மும்பை மற்றும் தானேவை சேர்ந்த ஹவாலா நெட்வொர்க், மற்றும் போலி நிறுவனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. போலி நிறுவனங்கள் மூலம் ரூ.1,500 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த சோதனையில் இதுவரை ரூ.1 கோடி கணக்கில் காட்டப்படாத ரொக்க பணமும், ரூ.22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் சட்டென்று சரிந்த பார்வையாளர் அரங்கு - 200க்கும் மேற்பட்டோர் காயம்!