மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. சிவசேனா மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி உள்ளார். 38 எம்எல்ஏக்கள், 10 சுயேச்சை எம்எல்ஏக்களுடன் கவுஹாத்தியில் முகாமிட்டுள்ளார். மேலும் நாங்கள் தான் உண்மையான சிவசேனா எனவும் கூறி வருகிறார்.
இந்தநிலையில், சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே கடந்த புதன்கிழமை இரவு (ஜூன் 22) அரசு பங்களாவான 'வர்ஷா' பங்களாவிலிருந்து வெளியேறினார். இதையடுத்து, அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், தமது தலைமையிலான தொண்டர்கள், நிர்வாகிகள் தான் உண்மையான சிவசேனா என்று கூறியுள்ளார். தாதரில் உள்ள சிவசேனா பவனில் கூடியிருந்த கட்சியின் மாவட்டப் பிரிவு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இன்று (ஜூன் 24) காணொலி மூலம் உரையாடிய உத்தவ் தாக்கரே கூறுகையில், "முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்திருக்கலாம். ஆனால், அதே உறுதிப்பாட்டுடன் உள்ளேன்.
முன்பு பிரச்னைகள் இருந்தபோதும், இரண்டு முறை ஆட்சிக்கு வந்தோம். முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான 'வர்ஷா'வை விட்டு நான் வெளியேறியிருக்கலாம். ஆனால், முதலமைச்சர் என்ற உறுதிப்பாட்டில் இருந்து அல்ல.
கடந்த இரண்டரை ஆண்டுகள் கரோனா பெருந்தொற்று மற்றும் எனது உடல்நிலை ஆகியவற்றுடன் போராடி வந்தேன். இந்த சூழ்நிலையை எதிரிகள் பயன்படுத்திக்கொண்டனர்" என்று கூறினார். முதலமைச்சரின் உரையின் போது சிவசேனா பவனில் அமைச்சர் ஆதித்யா தாக்கரே உடனிருந்தார்.
இதையும் படிங்க: தேசிய கட்சிகளின் ஆதரவு உள்ளது - எம்.எல்.ஏக்களிடம் ஏக்நாத் ஷிண்டே உறுதி