அண்ணல் காந்தியை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் சாவர்கரின் பேரன் ரஞ்சித் சாவர்கர் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "காந்தியை நான் தேசத் தந்தையாகக் கருதவில்லை.
இந்தியா போன்ற நாட்டில் ஒரே ஒரு தேசத் தந்தையை கொண்டிருக்க முடியாது. நாட்டிற்காகப் போராடிய ஆயிரக்கணக்கானோர் மறக்கப்பட்டுள்ளனர். இந்த நாட்டின் வயது 40-50 ஆண்டுகள் அல்ல.
இது ஐந்தாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த தேசம். சொல்லப்போனால் தேசத் தந்தை என்ற கருத்தையே ஏற்காதவன் நான்" என்றார்.
சாவர்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காந்தி கேட்டுக்கொண்டதன் காரணமாகவே சாவர்கர் ஆங்கிலேய அரசிடம் மன்னிப்புக் கேட்டதாக கருத்து தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு எதிர்வினை ஆற்றிய ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி "பாஜக பொய்யான வரலாறை உருவாக்கி பரப்பிவருகிறது. இதே நிலை தொடர்ந்தால், தேசத் தந்தை என்ற இடத்திலிருந்து அண்ணல் காந்தியை நீக்கி, அவரின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சாவர்கரை தேசத் தந்தையாக மாற்றிவிடுவார்கள்" என்றார்.
இதையும் படிங்க: 'சாவர்கர் மன்னிப்பு விவகாரம்' விவாதப்பொருளாக மாறியுள்ள ராஜ்நாத் சிங் கருத்து