ஐதராபாத்: ஆன்லைன் மூலம் போதைப்பொருள் கலந்த சாக்லெட்டை விற்பனை செய்ததாக, நரசிங்கியைச் சேர்ந்த ரிஷி சஞ்சய் மேத்தா (22) என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 48 போதைப்பொருள் கலந்த சாக்லேட் பார்கள், ஹாஷ் ஆயில் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து நகர காவல் ஆணையர் சி.வி.ஆனந்த் கூறுகையில், “பீனிக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வணிக மேலாண்மைப் படிப்பை படித்து வந்த மேத்தா கஞ்சா மற்றும் ஹாஷ் ஆயிலுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் இ-சிகரெட் மற்றும் போதைப்பொருள்களை விற்கத் தொடங்கினார். அந்த வியாபாரம் லாபகரமாக இல்லாததால், ஹாஷ் ஆயில் மூலம் சாக்லேட் தயாரித்து ஆன்லைனில் விற்பனை செய்துள்ளார்” என்று தெரிவித்தார்.
போதைப்பொருள் சாக்லேட் கட்டியை ரூ.5000 முதல் 10,000 வரை மேத்தா விற்றுள்ளதாகவும், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் போதைப்பொருள் கலந்த சாக்லேட்டை விற்பதாகவும், அதன் விலையை தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து பணமாகவோ அல்லது கூகுள் பே மூலமாகவோ பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது வாடிக்கையாளர்கள் அனைவரும் 18-24 வயதுடையவர்கள் என்றும் அவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ விசாரணை தொடங்கியது