ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஹைதராபாத் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில், வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக அப்துல் ஜாஹத், முகமது சமிருதீன், மாஸ் ஹசன் ஃபரூக் ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, நான்கு கையெறி குண்டுகள், சுமார் 5.41 லட்சம் ரூபாய் ரொக்கம், 5 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், அப்துல் ஜாஹத் ஏற்கனவே ஐஎஸ்ஐ, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதச்செயல்களில் ஈடுபட்டதாகவும் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
தற்போது மீண்டும் தனது ஐஎஸ்ஐ பயங்கரவாதத் தொடர்புகளுடன் சேர்ந்து, ஹைதராபாத்தில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாகவும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கையெறி குண்டுகள், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளிடமிருந்து பெறப்பட்டவை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் கையெழுத்துடன்கூடிய போலி ரசீதைக்கொடுத்து ரூ.1.31 கோடி மோசடி!