ஹைதராபாத் : தெலங்கானா மாநிலம் சந்திரயானகுட்டா பகுதியை சேர்ந்தவர் லியாகத். இவர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 10ஆம் தேதி) ஹைதராபாத் நகரின் பஞ்சகுட்டா பகுதியில் உள்ள மெரீடியன் ஹோட்டலில் பிரியாணி சாப்பிடச் சென்றார்.
அங்கு பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருந்த நிலையில், உணவு பரிமாறுபவரிடம், கூடுதல் தயிர்பச்சடி கேட்டு உள்ளார். இந்த விவகாரத்தில், லியாகத்திற்கும், அந்த வெயிட்டருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த வாய்த் தகராறு முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது.
ஹோட்டல் ஊழியர், லியாகத் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தி உள்ளார். இதனை நேரில் கண்ட மற்ற வாடிக்கையாளர்கள், உடனடியாக, காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், லியாகத் மற்றும் ஹோட்டல் ஊழியரை, விசாரணைக்காக, போலீஸ் ஸ்டேசன் அழைத்துச் சென்றனர்.
போலீஸ் ஸ்டேசனில் லியாகத் மற்றும் ஹோட்டல் ஊழியரிடம், போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு இருந்த நிலையில், லியாகத், திடீரென்று சரிந்து விழுந்தார். உடனடியாக, அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
லியாகத் மரணம் அடைந்த சம்பவம் காட்டுத் தீ போல பரவியதைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள், போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டனர். தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், லியாகத்தை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், போலீஸ் ஸ்டேசன் அழைத்துச் சென்றதே, லியாகத் உயிரிழப்புக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக, லியாகத்தின் உடல், காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, ஹோட்டல் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அகில இந்திய மஜ்லிஸ் இ இட்டேஹாதுல் முஸ்லீமின் (AIMIM) இயக்க பிரமுகரும் மற்றும் சட்ட மேலவை உறுப்பினருமான ரஹ்மத் பெயிக், உடனடியாக, பஞ்சகுட்டா போலீஸ் ஸ்டேசன் விரைந்து, இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.