கார்வார்: கர்நாடகா மாநிலம் கார்வார் அருகே உள்ள தேரகாம் கிராமத்தைச் சேர்ந்த துக்காராம் மடிவாலா என்ற நபர் தனது மனைவி சாந்த குமாரியுடன்(38) வசித்து வந்தார். துக்காராமுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அதேபோல் கடந்த 22ஆம் தேதி இரவு கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த துக்காராம் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகத் தெரிகிறது. பின்னர் சடலத்தைத் தண்ணீர் ஊற்றி வைக்கும் பேரலில் போட்டு மறைத்து வைத்துள்ளார்.
மறுநாள் சரக்கு வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்து, சடலத்தைப் பேரலோடு ஏற்றிக் கொண்டு வனப்பகுதிக்குச் சென்றுள்ளார். ஓட்டுநர் ரிஸ்வான் மற்றும் சமீர் பாண்டோஜி ஆகியோரின் உதவியுடன் சடலத்தை ராம்நகர் காட்டில் வீசச் சென்றதாகத் தெரிகிறது.
இவர்கள் பேரலை ஏற்றிச் செல்வதைக் கண்டு சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே துக்காரம் சடலத்தை காட்டில் வீசிவிட்டு திரும்பியுள்ளார். அப்போது குறிப்பிட்ட வனப்பகுதிக்கு விரைந்த போலீசார், துக்காராம் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். பிறகு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மாஸ்டர் பட பாணியில் சிறுவர்கள் மூலம் போதைப்பொருள் கடத்தும் கும்பல்