டெல்லி: தலைநகர் டெல்லியில் சமைக்காத காரணத்திற்காக கட்டிய மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த குடிகார கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்ஸ்வா பகுதியைச் சேர்ந்தவர் பஜ்ராங்கி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இவருக்கும், பிரீத்தி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.
பஜ்ராங்கி - பிரீத்தி தம்பதிக்கு 6 மாத கைக் குழந்தை உள்ளது. 3 ஆண்டுகளாக இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குடி பழக்கத்திற்கு அடிமையான பஜ்ராங்கி, தினமும் மது அருந்தி விட்டு பிரீத்தியை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
தம்பதி இடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளை இருவரது வீட்டாரும் சமாதானப்படுத்தி வந்து உள்ளனர். குழந்தை பிறந்தது முதல் பிரீத்திக்கு அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனால் பிரீத்தியால் முன்பு போல் வீட்டு வேலைகளை கவனிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவும் தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று பஜ்ராங்கி உச்சக்கட்ட குடி போதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. உடல் நலப் பிரச்சினை காரணமாக பிரீத்தி சமையல் செய்யாமல் ஓய்வு எடுத்து உள்ளார். வீட்டில் சாப்பாடு இல்லாததை கண்டு பஜ்ராங்கி கடும் கோபம் அடைந்து உள்ளார்.
இதனால் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்த மனைவியை குச்சியால் தாக்கி உள்ளார். வீட்டை விட்டு ஓடினால் மது போதையில் குழந்தையை கணவர் கொன்று விடுவாரோ என்ற அச்சத்தில் பிரீத்தி 6 மாத பெண் குழந்தையை இறுக கட்டி அணைத்து நகராமல் இருந்து உள்ளார். மது போதையில் பஜராங்கி கொடுமையாக தாக்கியதில் வலி தாங்க முடியாமல் பிரீத்தி அங்கேயே மயங்கி விழுந்து உள்ளார்.
மயங்கி விழுந்த நீண்ட நேரமாகியும் எழும்பாததை கண்டு பயந்து போன பஜராங்கி, தன் மாமியாரை அழைத்து பார்க்கச் செய்து உள்ளார். பிரீத்தியை உறவினர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு பிரீத்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் பிரீத்தியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், பஜராங்கி மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுவுக்கு அடிமையான தந்தையின் ஆக்ரோஷத்தால் தாயை இழந்து 6 மாத கைக் குழந்தை தவிப்புக்குள்ளாகி இருப்பது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 'தயிர்' to 'தஹி' - ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி மொழியா? - மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை!