குஜராத்: திருச்சியில் இருந்து புறப்பட்ட ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் (Humsafar Express), இன்று (செப்.23) குஜராத்தில் உள்ள வல்சாத் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில், ரயிலின் பவர் கோச்சில் ஏற்பட்ட இந்த தீ, அடுத்தடுத்து இருந்த இரண்டு பெட்டிகளுக்கும் வேகமாக பரவியதாக ரயில்வே வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆர்.பி.எப், ஜி.ஆர்.பி.எப் குழுவினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். பின்னர் அதிகாரிகள் அந்த வழித்தடத்தில் இருந்த அனைத்து ரயில்களையும் சிறிது நேரம் நிறுத்தி வைத்த நிலையில், ரயில் பெட்டி ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பயணிகள் ரயிலை விட்டு வெளியேற முற்பட்டதால், நெரிசல் போன்ற சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டு, உடனடியாக தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், துரிதமாக செயல்பட்டு பயணிகள் ரயிலில் இருந்து இறக்கப்பட்டதால் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. தொடர்ந்து, தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: Chennai Crime News: பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் போலீஸ்.. தாயை ஏமாற்றிய மகன் கைது..