சென்னை: பொதுவாக பெண்கள் அவர்களின் உதடுகள் மென்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காகச் செயற்கையான முறையில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த லிப் பாம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். சிலருக்கு, உதடுகளைச் சுற்றி வறட்சி, வெடிப்பு தோன்றும். குறிப்பாகக் குளிர் காலத்தில் உதடுகள் ஈரப்பதத்தைத் தக்க வைக்க முடியாமல் உடனே வறண்டு போவதால் புண்கள் தோன்றுகிறது.
கடைகளில் காசு கொடுத்து ரசாயனம் கலந்த லிப் பாம் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டிலிருக்கும் சில இயற்கையான பொருட்களைக் கொண்டு லிப் பாம் தயார் செய்து உபயோகப்படுத்தலாம்.
உதடுகளில் உள்ள வெடிப்பை அகற்றுவதற்கும், செயற்கையான முறையில் கிடைக்கும் லிப் பாம்களில் உள்ள ரசாயனங்கள் வாய்க்குள் சென்று ஆபத்தான சூழ்நிலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கும், எளிதாக மற்றும் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து இயற்கையான முறையில் லிப் பாம் தயார் செய்வது எப்படி? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
லிப் பாம்: லிப் பாம்கள் உதடுகளை மென்மையாகவும், மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் மெழுகு போன்ற தோல் பராமரிப்பு பொருளாகும். இது உதடுகளை ஈரப்பதமாக்குகிறது மற்றும் அவற்றை நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும், உதடுகளைக் குளிர்ந்த வெப்பநிலை மற்றும் வறண்ட காற்றிலிருந்து பாதுகாக்கிறது.
லிப் பாம் தயார் செய்வதற்கு அடிப்படை பொருட்கள்: தேங்காய் எண்ணெய், தேன், வைட்டமின் ஈ எண்ணெய், ஷியா வெண்ணெய் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் போன்ற இயற்கைப் பொருட்கள்.
நிறத்திற்குப் பயன்படும் பொருள்கள்: பீட்ரூட், லாவெண்டர், ஸ்ட்ராபெரி, எலுமிச்சை மற்றும் ரோஸ் போன்றவை நிறமாற்றத்தைக் குறைக்க உதவுகிறது.
எச்சரிக்கை பொருள்கள்: கிராம்பு, இலவங்கப்பட்டை மற்றும் யூகலிப்டஸ் அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை உதடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
இயற்கையான லிப் பாம்களின் வகைகள்:
- புதினா சாக்லேட் லிப் பாம்
- ராஸ்பெர்ரி மற்றும் எலுமிச்சை லிப் பாம்
- ரோஸ் லிப் பாம்
- மிளகுக்கீரை எண்ணெய்லிப் பாம்
- தேன் லிப் பாம்
- சுண்ணாம்பு லிப் பாம்
- திராட்சைப்பழம் லிப் பாம்
- வெண்ணிலா ஆரஞ்சு லிப் பாம்
- லாவெண்டர் புதினா லிப் பாம்
இயற்கையான பொருட்களால் செய்யப்பட்ட லிப் பாம்கள் வேகமாகக் குணமடைய வழி வகுக்கிறது.
லிப் பாம் தயார் செய்யும் முறை:
தேங்காய் எண்ணெய்: ஒரு தேக்கரண்டி பெட்ரோலியம் ஜெல்லியை ஐந்து விநாடிகள் சூடாக்கிய பிறகு, ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். அவை குளிர்ந்த பிறகு, அதை ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில் வைத்து அதை தினமும் தடவவும். தேங்காய் எண்ணெய் ஈரப்பதத்தை அளிக்கும்.மேலும், இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உதடு வெடிப்பைத் தடுக்கிறது.
கற்றாழை: கற்றாழையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யில் ஒரு சிட்டிகை வெல்லம் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். குளிர்ந்த பிறகு, ஒரு தேக்கரண்டி கற்றாழை கூழை கலந்துக் கொள்ளவும். கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதடுகளை உலர்த்தாமல் வைத்துக்கொள்ளும். மேலும், விரிசல் மற்றும் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும்.
ரோஜா இதழ்கள்: ஒரு தேக்கரண்டி பெட்ரோலியம் ஜெல்லியை சில நொடிகள் சூடாக்கி, அதில் ரோஜா இதழ்களைச் சேர்த்துக் கலக்கவும். ரோஜாக்களின் பண்புகள் உதடுகளுக்கு ஊட்டமளித்து, இயற்கையான நிறத்தைக் கொடுக்கிறது.
இதையும் படிங்க: லேடீஸ் ஹேண்ட் பேக் சீக்ரெட்.. உள்ள என்னென்ன இருக்கனும் தெரியுமா.?