டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், ஜோஷிமத் நகரில் கடந்த 6ஆம் தேதி ஏற்பட்ட நிலச் சரிவு மற்றும் வெடிப்பால், பல்வேறு வீடுகள் மற்றும் கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்தும் விழுந்தன. இதனிடையே நில அதிர்வு காரணமாக ஜோஷிமத் நகரம் மண்ணுக்குள் புதையும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகின.
சம்பவ இடத்தை பார்வையிட்ட உத்ரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதியில் இருந்த மக்கள் அரசு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
ரூ.1.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு: ஜோஷிமத் நகரில், புவியியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நில வெடிப்பால் வீடுகளில் விரிசல் ஏற்பட்ட மக்களுக்கு அம்மாநில அரசு நிவாரணம் அறிவித்தது. வீடுகளை இழந்தவர்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்குவதாகவும், வாடகை வீட்டில் வசிக்க விரும்பும் மக்களுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் என 6 மாத காலத்திற்கு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.
தொடர்ந்து நில வெடிப்பால் சேதமான கட்டடங்கள், குடியிருப்புகள் கணக்கெடுக்கப்பட்டன. அதிகளவில் சேதமான ஹோட்டல் மவுன்ட் வியூ மற்றும் ஹோட்டல் மலாரி கட்டடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழல் நிலவுவதாகவும், அருகில் உள்ள குடியிருப்புகளில் விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அதிகாரிகள் அறிக்கை அளித்த நிலையில், இரு ராட்சத கட்டடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டது.
இரு ஹோட்டல்கள் இடிப்பு: இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இரு ஹோட்டல்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ராட்சத கிரேன் மற்றும் கட்டடங்கள் இடிக்கும் இயந்திரங்கள் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றது. இதனிடையே நில வெடிப்பு மற்றும் மண் சரிவு ஏற்பட்ட ஜோஷிமத் நகரின் முதல் செயற்கைக்கோள் படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "நில வெடிப்பு மற்றும் மண் சரிவின் காரணமாக எப்போது வேண்டுமானாலும் ஜோஷிமத் நகரம் பூமிக்குள் புதையும் அபாயம் நிலவுகிறது. கடந்த 12 நாட்களில் மட்டும் சமோலி மாவட்டம், 5.4 சென்டி மீட்டர் அளவில் பூமிக்குள் புதைந்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது’’ எனக் கூறப்பட்டுள்ளது.
அமித்ஷா உயர் மட்ட ஆலோசனை: நரசிம்ம மந்தீர், ராணுவ ஹெலிபேட், ஜோஷிமத் டவுன் பகுதிகளின் தற்போதைய செயற்கைக்கோள் படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜோஷிமத் நில வெடிப்பு குறித்து உயர் மட்ட அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவாத், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புபேந்திர யாதவ், சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராணுவ கட்டடங்களில் விரிசல்: ஜோஷிமத் நகரில் நிலவும் தற்போதையை சூழல் குறித்தும், மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உத்ரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார்.
723 கட்டடங்கள் நில வெடிப்பால் சேதமடைந்து இருப்பதாகவும், அதில் 25 முதல் 27 கட்டடங்கள் ராணுவத்திற்கு சொந்தமானது என்றும்; அதில் இருந்த ராணுவ வீரர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Security Breach: பாதுகாப்பில் மீண்டும் குளறுபடி - பிரதமரை நெருங்கிய நபரால் பரபரப்பு!