பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தேசிய லெர்னிங் அகாடமி (National Academy for Learning) என்ற பள்ளி இயங்கி வருகிறது. பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். பள்ளியில் ஜெலட்டின் குச்சிகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும் மதிய உணவு இடைவேளையின் போது வெடிகுண்டு வெடிக்கும் என்றும் மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து பதற்றம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினருக்குத் தகவல் அளித்துள்ளனர். மேலும் பள்ளியிலிருந்த ஆயிரம் மாணவ, மாணவியர்கள் உடனடியாக பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரிந்த நிலையில், தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல பள்ளியின் முன் பெற்றோர்கள் திரண்டதால் பள்ளி வளாகமே களேபரமாகக் காட்சி அளித்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சலின் ஐ.பி. முகவரியை(IP Address) கொண்டு வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய போலீசார், மிரட்டல் கடிதம் அனுப்பியதாகச் சிறுவனைக் கைது செய்தனர்.
விசாரணையில், இணையதளம் மூலம் பள்ளியின் மின்னஞ்சலைக் கண்டுபிடித்த சிறுவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும், இது குறித்து விசாரித்த போது விளையாட்டாகச் செய்ததாகக் கூறியதாகவும் காவல்துறை தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சிறுவன் மாவட்ட சிறார் நீதி வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உத்தமர் காந்தி விருதுக்கு விண்ணப்பிக்க அரியலூர் ஆட்சியர் அழைப்பு!