புதுடெல்லி: 2002ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ரா என்னும் பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக குஜராத் மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் மீது சிறப்பு குழு விசாரணை நடத்தியது, இதில் இருவரும் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டனர்.
பின்னர், இதனை எதிர்த்து முன்னாள் எம்.பி., ஜாப்ரியின் மனைவி, சாகியா ஜாப்ரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், ஆனால் அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (ஜுன் 25) அளித்த பேட்டி ஒன்றில், "ஜனநாயகத்தில் அரசியலமைப்பு எவ்வாறு மதிக்கப்பட வேண்டும் என்பதற்கு அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக பிரதமர் மோடி திகழ்கிறார். மோடியும் விசாரிக்கப்பட்டார், ஆனால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் திரண்டு போராடவில்லை. நாங்கள் சட்டத்திற்கு ஒத்துழைத்தோம்.
நானும் கைது செய்யப்பட்டேன். நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 18, 19 ஆண்டு கால யுத்தம், ஒரு வார்த்தை கூட பேசாமல், சிவன் ஆலகால விஷத்தை முழுங்கியது போல் அனைத்து துக்கங்களையும் தனக்குள் வைத்துக்கொண்டு போராடி, இறுதியாக உண்மை வெளிவந்துள்ளது. இன்றைக்கு பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்கள், மனசாட்சி இருந்தால் மோடியிடமும் பாஜகவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" எனக் கூறினார். சமீபத்தில், நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியபோது, காங்கிரஸார் நாடு முழுவதும் போராட்டம் நடத்தியதை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் அமித் ஷா இவ்வாறு கூறியுள்ளார்.
பின்னர் தொடர்ந்து பேசிய அவர், "குஜராத் கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்துள்ளது. குறைந்த சேதத்துடன் நிலைமையை மாநில அரசு கட்டுப்படுத்தியுள்ளது என்றும் நீதிமன்றம் கூறியது. சுமார் 300 பக்கங்களைக் கொண்ட இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கியது.
நிறைய கூட்டங்களை மோடி நடத்தி அதன்மூலம் அமைதிக்கான நிலைநாட்டியதாகவும் நீதிமன்றம் கூறியது. மோடி வெற்றி பெற்றுள்ளார். யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை, கடந்த பல ஆண்டுகளாக மோடியின் மீது தொடர்ந்து அரசியல் நோக்கத்துடன் புகார்கள் வைக்கப்படாலும் அதிலிருந்து வெளியே வந்து தங்கம் போல ஜொலித்துக்கொண்டிருக்கிறார்" என்றார்.
இதையும் படிங்க: தாக்கரேவுக்கு வழிகாட்டியா எடப்பாடி? - இந்த மாதிரி நேரத்துல வீரனுங்க என்ன செய்வாங்க தெரியுமா?