நாக்பூர் (மகாராஷ்டிரா): பொதுவாக தாலசீமியா என்னும் நோயானது, பரம்பரை ரத்தக் கோளாறுகளாலும், மரபணு மாற்றங்களாலும் வரக் கூடியவை. எனவே, தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ரத்தம் செலுத்தப்படுகிறது. இதற்காக ரத்த வங்கியில் இருந்து, பல்வேறு சோதனைகளுக்குப் பிறகுதான் ரத்தம் வழங்கப்படுகிறது. இருப்பினும், அசுத்தமான ரத்தம் கொடுக்கப்பட்டதால் ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டு ஒரு குழந்தை இறந்துள்ளது.
மேலும், நாக்பூரின் ஜரிபட்கா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நான்கு குழந்தைகளுக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக சுகாதாரத்துறை தற்போது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் விக்கி ருக்வானி ஈடிவி பாரத் உடன் பேசுகையில், “இந்தச் சம்பவத்தை அடுத்து பெற்றோர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தாலசீமியா நோயால் தாக்கப்பட்ட பெற்றோருக்கு எச்ஐவி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் எச்ஐவிக்கு மருந்து இல்லை எனப் பெற்றோர்கள் புகார் அளிக்கின்றனர்” எனக் கூறினார்.
மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய், “நான் நன்கு பரிசோதிக்கப்பட்ட ரத்தத்தைப் பெற்றிருந்தால் என் மகளுக்கு இன்று இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. தாலசீமியா நோயாளிக்கு பரிசோதிக்கப்பட்ட ரத்தத்தை கொடுக்க வேண்டும்” எனக் கூறினார். இச்சம்பவம் அரசு, மருத்துவமனை மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இல்லை; ஆனால்...' - பீடிகை போட்ட ராதாகிருஷ்ணன்!