காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்(100) மோடி இன்று (டிச.30) காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஹீராபென் எளிமையின் உருவமாக வாழ்ந்தார் என அவரது அண்டை வீட்டார் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
ஹீராபென்னின் அண்டை வீட்டாரில் ஒருவரான கீர்த்திபென் படேல் கூறும்போது, "ஹீராபா சுமார் ஏழு ஆண்டுகளாக இங்கு வாழ்ந்தார். நாங்கள் அவரை தினமும் சந்திப்போம். அவர் மிகவும் அமைதியாகவும் எளிமையாகவும் இருந்தார். இன்று எனது தாயை இழந்துவிட்டதுபோல உணர்கிறேன். அவர் எப்போதும் எங்களுக்கு ஆசிகளை வழங்கிக் கொண்டே இருந்தார். அவர் எங்களது ராஜமாதா போன்றவர்" என்றார்.
மற்றொரு அண்டைவீட்டாரான தாராபென் படேல் பேசுகையில், "ஹீராபா எனது குடும்ப உறுப்பினர் போன்றவர். அவர் அக்கம்பக்கத்தில் வசிக்கும் அனைவருடனும் எப்போதும் இணக்கமான உறவைப் பேணி வந்தார்" என்றார்.
"ஹீராபா எப்போதும் எளிமையான வாழ்க்கையில் நாட்டம் கொண்டிருந்தார், அனைவருடனும் அன்பாகப் பழகுவார். எல்லா விழாக்களிலும் பங்கேற்பார். எளிய மக்களிடம் அன்பாக இருக்க வேண்டும் என குடியிருப்பில் வசிக்கும் அனைவருக்கும் அறிவுறுத்துவார்" என்று பிரஜபதி என்ற நபர் கூறினார்.
ஹீராபென் வசித்த விருந்தாவன் குடியிருப்பு சங்கத்தின் தலைவர் ஹஸ்முக் படேல் கூறும்போது, "ஹீராபா இங்கு வசித்தது எங்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடியிருப்பு வாசிகளும் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர். ஹீராபாவுடன் வாழ வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் அனைவரும் பெருமைப்படுகிறோம். அவர் எங்கள் அனைவருக்கும் எப்போதும் ஆசிகளை பொழிந்தார்" எனக் குறிப்பிட்டார்.
மேலும், பிரதமரின் தாயாக இருந்தபோதும் சாதாரண மனிதராகவே அவர் வாழ்ந்து வந்ததாகவும், பண்டிகைகளின்போது அவரை சந்திக்கும் அனைவருக்கும் ஆசி வழங்குவார் என்றும் குடியிருப்புவாசிகள் உருக்கமாக தெரிவித்தனர்.
இதயும் படிங்க: ‘எளிமை அர்ப்பணிப்பின் உருவம் ஹீராபென் மோடி’ - தாயின் நினைவுகளை பகிர்ந்த மகன்